திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவர் குஞ்சு முகம்மது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள சர்வதேச திரைப்பட விழாவில் மலையாள படங்களுக்கான தேர்வுக் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த நவம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து விருது கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது குஞ்சு முகம்மது விருதுக் கமிட்டியில் இருந்த ஒரு பெண் இயக்குனரை தன்னுடைய அறைக்கு வரவழைத்து அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்த பெண் இயக்குனர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தார்.
அதைத்தொடர்ந்து குஞ்சு முகம்மது மீது திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்மையை அவமதித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் நிலையத்தில் ஆஜரான அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்தநிலையில் இயக்குனர் குஞ்சு முகம்மதுக்கு எதிராக கன்டோன்மென்ட் போலீசார் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
