ஏகனாம்பேட்டை அரசு மகளிர் பள்ளி அருகே குப்பையால் சுகாதார சீர்கேடு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வாலாஜாபாத்: ஏகனாம்பேட்டை பள்ளி அருகே அகற்றப்படாத குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வாலாஜாபாத் ஒன்றியம் ஏகனாம்பேட்டை ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. கடந்த 9 மாதங்களுக்கு பிறகு 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், அந்த பள்ளி வளாகம் சுகாதாரமாக உள்ளதா என்பதை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் ஏகனாம்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில், பல மாதங்களாக குவிந்து கிடக்கும் குப்பையால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பொதுமக்களுக்கு மட்டுமின்றி, மாணவிகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கொரோனா தாக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டும் வரும் மக்களுக்கு, இதுபோன்ற குப்பைகளால் மலேரியா, சிக்குன் குன்யா உள்பட பல்வேறு மர்மக் காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏகனாம்பேட்டை ஊராட்சியில் அரசு துவக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவிகள்  படிக்கின்றனர். தற்போது, பல்வேறு நிபந்தனைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் பள்ளி வளாகம் அருகிலேயே குப்பை குவியல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இதனால், மாணவர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், அந்த வழியாக செல்லும் கிராம மக்கள், குப்பைகளில் இருந்து வீசும் கடும் துர்நாற்றத்தால் முகம் சுளித்தபடி சென்று வருகின்றனர். இதுபற்றி பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக செயல்படுகிறார். பள்ளிகள் திறக்க அரசு பல்வேறு நிபந்தனைகள் விதித்தாலும், சில இடங்களில் இதுபோன்ற அலட்சியம் காணப்படுகின்றன.  இதனை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்தால், சுகாதார சீர்கேடு இல்லாத கிராமமாக இருக்கும் என்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். அங்கு கிருமி நாசினி தெளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்  என வலியுறுத்துகின்றனர்.

Related Stories: