மனச்சிதைவு நோய்க்குத் தீர்வே இல்லையா?

நன்றி குங்குமம் டாக்டர்

அகமெனும் அட்சயப் பாத்திரம்

ஆளுமை கோளாறுகளிலேயே மிகப் பரவலாக பேசப்படுவதும், நடைமுறையில் பித்து, மனச்சிதைவு என்று எளிய மனிதர்களும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடியதுமான மனநோய் (Schizophrenia).ஏனெனில், நடைமுறையில் இருந்து முற்றிலும் விலகிய நடத்தைகள், பிரமைகள் (Hallucinations), சமூக விலகல் (Social withdrawl), உணர்வுகள் மற்றும் ஊக்கமின்மை (Lack of emotion and motivation), ஒருங்கிணைப்பற்ற சிந்தனையும், பேச்சும் (Disorganized thinking and speech), நினைவுத்திறன் மற்றும் கவனக்குவிப்பு பாதிப்பு போன்ற பித்து நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிந்துவிடும்.

தினசரி குளிப்பது, உண்ணுவது, உடுத்துவது, உறங்குவது போன்ற வழக்கமான செயல்களைச் செய்வதிலேயே தடுமாற்றமும் குழப்பமும் இருக்கும் என்பதால் schizophrenia பாதிப்பு கொண்டவரைப் பார்த்துக் கொள்பவரின் நிலை மிகவும் சிரமமே.இல்லாத காட்சிகள் இருப்பதாகச் சொல்வது, வித்தியாசமான ஒலிகள் கேட்பதாகக் கூறுவது, எல்லோரையும் சந்தேகத்தோடு பார்ப்பது, வித்தியாசமான நடத்தைகள் என்று நீளும் மனச்சிதைவின் பாதிப்புகளை நாம் எல்லோருமே கேள்விப்பட்டிருக்கிறோம். இத்தகைய பித்துநிலையில் தீவிரப் பாதிப்பு அடைந்தவர்கள் பிறர் உயிருக்குச் சேதம் விளைவிப்பது அல்லது தற்கொலைக்கு முயற்சி செய்வது என்ற எந்த எல்லைக்கும் போவார்கள். எனவே Schizophrenia குறித்து விரிவாக அறிந்து கொள்வோம்.

1860 ஆம் ஆண்டு பெல்ஜியத்தைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் Benedict Morel 13 வயதுச் சிறுவனுக்கு ஏற்பட்ட நடத்தை மாற்றங்களின் வழி மனச்சிதைவு நோயைத் தெளிவாக விவரித்தார். நன்றாகப் படித்துக் கொண்டிருந்த அச்சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையிலிருந்து விலகி, மிகவும் அமைதியாகி விட்டான். படித்தவற்றையெல்லாம் மறந்துவிட்டான். தன் தந்தையைக் கொலை செய்ய வேண்டும் என்று அடிக்கடிக் கூற ஆரம்பித்தான்.

சிறுவனைப் பரிசோதித்த Benedict மூளையின் அடிப்படை வலுவான மரபுக் காரணியின் சீரழிவினால் இந்த நிலை ஏற்பட்டது என்று முடிவு செய்தார். ‘Mental deterioration at early age’ என்ற இவரது விளக்கமும், குறிப்புகளும் இன்றும் Schezopherinia மனநோயைக் கையாள உதவுகின்றன.1911 -இல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர் Eugen Bleuler பிளவு மனம் (Split mind) என்றும் எண்ணத்திற்கும், உணர்வுக்கும், நடைமுறைக்குமான தொடர்புகள் அறுந்த நிலை என்றும் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த உளவியல் குறிப்புகளை எல்லாம் டிஜிட்டல் தரவுகளின் உதவியால் இன்று சிறுவர்கள் கூட தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனச்சிதைவு நோய்களின் புள்ளிவிபரங்களை நாம் எப்படி எடுத்துக் கொள்வது? யோசிப்போம்.முதலில் Scheizophernia -வின் வகைகளை அறிந்து கொள்வோம்.

Undifferentiated, Disorganised, Paranoid, Catatonic, Residual என ஐந்து வகை மனப்பித்துகளை நவீன உளவியல் பட்டியலிடுகிறது. இவற்றில் முதல் இரண்டு வகைகளும் பெயரிலேயே பொருளை உணர்த்தி விடுகின்றன. Paranoid எனும் தீவிர சந்தேகப்பித்து குறித்து நாம் ஏற்கனவே விரிவாகப் பேசியுள்ளோம். ஆக, மீதமுள்ளவற்றில் Catatonic உடல் இயக்கங்களற்ற தன்மை (Motor changes – Immobility) கொண்டது. Residual ஆரம்ப நிலையில் இருக்கும் மனப்பித்து எனலாம். சிலர் கடந்த கால மனப்பாதிப்புகளை எப்படியோ சமாளித்து மீண்டு வந்திருப்பார்கள். இருப்பினும் அதன் விளைவாக ஆழ மனதில் எஞ்சியிருக்கும் சமூக வெறுப்பு, சுய பச்சாதாபமே Residual type எனலாம்.

அமெரிக்க மனநல சங்கம் 2013 ஆம் ஆண்டின் DSM 5 தொகுப்பில் மேற்குறிப்பிட்ட வகைகள் எல்லாமே ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்ட கலவையாக இருக்கின்றன என்று முடிவு செய்தது. எனவே, எல்லா வகைமைகளையும் சேர்த்தே ‘Schizophernia’ என்றவொரு பெயரை மட்டும் பட்டியலில் இணைத்தது. ஆனால் உளவியல் சிகிச்சைகளின் போது குறிப்பிட்ட வகைமை மனச்சிதைவு என்று கண்டறிவது மிக அவசியமாகும்.

Scheizophernia உளநோயில் இதர மனக்கோளாறுகளை விடவும் மரபுக் காரணிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கின்றது. பிரசவச் சிக்கல்களில் ஏற்படும் குரோமோசோம் எண்ணிக்கை மாறுபாடுகள், தாய்க்கு ஏற்படும் Influenza வைரஸ் தாக்குதல், வயதான தந்தை போன்ற காரணங்களால் மனச்சிதைவு நோய் ஏற்படக்கூடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், மூளை நரம்பியல் கடத்திகளின் சமச்சீரற்றநிலையும் மனப்பித்து பிடிக்கக் காரணமாகிறது.

எழுத்து விஞ்ஞானி சுஜாதா அவர்கள் Schezopherinia பாதிப்பு கொண்டவர்களின் மூளைக்குள் வென்ட்ரிக்கிள் ரத்தக் குழாய்கள் சற்றுப் பெரிதாக இருக்கின்றன என்ற அறிவியல் உண்மையை எல்லோருக்கும் புரியும்படி கூறியுள்ளார். எனவே இதர மனக்கோளாறுகளைப் போல் சூழ்நிலைக் காரணிகள், வாழ்க்கைச் சூழல்களின் தாக்கத்தினால் ஏற்படும் நோய் என்று மனப்பித்தை சொல்ல முடியாது.

இத்தகு மரபியல், உடலியல் காரணிகளின் தாக்கத்தைப் புரிந்து கொள்ளாமல், இன்றுகூட பலரும் பேய் பிடித்து விட்டது, சாத்தான் ஏறியுள்ளது என்பார்கள். வேப்பிலை விரட்டுதல், மாந்த்ரீகம், சிறப்பு பிரார்த்தனை, திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்று அறியாமையோடு மனச்சிதைவு நோயினை அணுகுகிறார்கள். இவற்றால் இன்னும் நிலைமை மோசமாகவே வாய்ப்பு அதிகம். மூளையின் பகுதிகளுக்குச் செல்லும் ஆக்சிஜன் பற்றாக்குறை, மெட்டபாலிஸத்தில் வேறுபாடு போன்ற காரணங்களையும் நவீன அறிவியல் கண்டறிந்து அவற்றிற்கான மருந்துகளையும் கண்டுபிடித்துள்ளது. நாள்தோறும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய இந்த மருந்துகள் மனச்சிதைவு நோய் கொண்டவர்களை ஓரளவு கட்டுக்குள் வைக்கும்.

அசுர வைத்தியம் எனப்படும் மின்சார அதிர்வு (Electric shock) கொடுக்கும் முறையும் உலகெங்கும் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 1986 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லால் நடிப்பில் தாளவட்டம் என்ற மலையாளத் திரைப்படம் வந்தது. அது தமிழில் மனசுக்குள் மத்தாப்பு என்ற பெயரில் வெளிவந்ததை நம்மில் பலரும் பார்த்திருப்போம். அத்திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மனநோய் சிகிச்சைக்காக மின்சார அதிர்வுகளைக் கொடுக்கும் காட்சிகளைப் பார்த்து எண்பதுகளின் குழந்தைகள் மிகவும் பயந்திருப்போம். ஆனால், இன்றைய சூழலில் மன நோய்கள் மீது இருந்த பயங்களில் இருந்து சமூகம் மீண்டு வந்துவிட்டது என்று சொல்லலாம். அதன் காரணமாகவே உளவியல் நோய்கள் குறித்த வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன.

தற்காலத்தில் மின்சார அதிர்வு சிகிச்சை பல நாடுகளில் கைவிடப்பட்டு விட்டது. இத்தகைய அதி மின்சார அதிர்வுகள் காரணமாக அவர்களது நினைவு அடுக்குகளில் நிரந்தர சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.தீவிர எதிர்மறை மனநிலையாளர்கள் என்று அறியப்படும் Schezhophernia மனச்சிதைவு நோயின் பரவலும், மருந்தில்லா உளவியல் சிகிச்சை முறைகளைப் பற்றியும் மேலும் விரிவாக அடுத்த இதழில் காண்போம்.

தொகுப்பு: மனநல ஆலோசகர் ஜெயஸ்ரீ கண்ணன்

Related Stories: