குதிகால்வலி பிளாண்டார் ஃபெசைட்டிஸ் ஆக இருக்கலாம்!

நன்றி குங்குமம் டாக்டர்

வலியை வெல்வோம்

முதலில் வீட்டு வைத்தியம் செய்தார், ஆனால் வலி தொடர்ந்தது. நடக்க நடக்க கொஞ்சம் குறையும், ஆனால் மாலை வீட்டில் வேலை செய்யும்போது மீண்டும் அதிகரிக்கும்.விக்ரம் 32 வயது இளைஞன், ஜிம் டிரெய்னர். தினசரி ஓடுவார், ஒர்க் அவுட் செய்வார். ஒரு மாதமாக வலது குதிகாலில் வலி அதுவும் காலையில் எழுந்ததும் கடும் வலி, ஓடும் போது அதிகரிக்கும். ஏதோ காயம் என்று நினைத்தார், ஆனால் ஓய்வு எடுத்தும் சரியாகவில்லை.

இந்த இருவரும் மருத்துவரை சென்று பார்த்த போது மருத்துவர் கண்டறிந்தது ‘பிளான்டர் ஃபெசைட்டிஸ்’ என்ற குதிங்கால் வாதம் / குதிகால் வலி. பிளாண்டார் ஃபெசைட்டிஸ் (Plantar Fasciitis) என்பது பாதத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் பொதுவான வலி. இது உலகில் பல கோடி மக்களை பாதிக்கிறது, குறிப்பாக 40-60 வயதினருக்கு ஏற்படுகிறது. இது குதிகால் வலியாக தொடங்கி, பின்னர் நடந்து செல்வதற்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

பாதத்தின் அடியில் பிளாண்டார் ஃபேசியா என்ற தடித்த, இறுகிய தசைநார் போன்ற அமைப்பு உள்ளது. இது குதிகால் எலும்பின் (calcaneus) அடிப்பகுதியில் தொடங்கி, பாதத்தின் முனை வரை (விரல்களின் அடிப்பகுதி) செல்லும். இது பாதத்தின் ஆர்ச்சை (longitudinal arch) தாங்கி நிற்கும் முக்கிய அமைப்பாகும்.நடக்கும்போது பிளாண்டார் ஃபேசியா “windlass mechanism” மூலம் வேலை செய்யும். அதாவது, விரல்கள் மேலே உயரும் போது இந்தத் தசை நார் இறுகி, பாத பக்கவாட்டு வளைவை(arch) உயர்த்தி உடல் எடையை சமமாக பகிரும். இது shock absorber போல் செயல்பட்டு குதிகாலின் அழுத்தத்தை குறைக்கும்.

பிளாண்டார் ஃபெசைட்டிஸ் தசை நாரில் தொடர் சிறிய காயங்கள் (microtears) மற்றும் வீக்கம் ஏற்படுவதால் வரும். இது குதிகால் இணையும் இடத்தில் அதிகம் பாதிக்கும். உலக அளவில் இந்த பாதிப்பு பொது மக்களில் 4% முதல் 10% வரை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன (அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் சுமார் 7-10%). இந்திய மக்களில் குதிகால் வலி பாதிப்பு 4% முதல் 7% வரை இருக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.

செவிலியர்கள், ஆசிரியர்கள் போன்ற அதிக நேரம் நிற்கும் தொழில்களில் 21% வரை பாதிப்பு இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. தெரு வியாபாரிகள் போன்ற குழுவில் 46% வரை அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு (2025) கூறுகிறது. இந்தியாவில் பொதுமக்களுக்கு சுமார் 5-10% இருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர். ஆனால் அதிக எடை, நிற்கும் வேலை, தவறான காலணி போன்ற காரணங்களால் சில குழுக்களில் அதிகமாக இருக்கும். துல்லியமான தரவுகள் இல்லை.

காரணங்கள்

*அதிகமாக நடத்தல் அல்லது ஓட்டம் (ரன்னர்கள், ஆசிரியர்கள்).
*கால் பாதத்திற்கு தகுந்தாற்போல் இல்லாமல் தவறான காலணி அணிதல் (flat shoes அல்லது high heels).
*அதிக எடை
*தட்டையான பாத அமைப்பு (flat foot) அல்லது அதிகரித்த பாத வளைவு (high arch).
*கெண்டைக்கால் தசை இறுகுதல்.
*திடீர் அதிக உடற்பயிற்சி.

அறிகுறிகள்

1.காலையில் எழுந்ததும் முதல் அடி வைக்கும்போது கடும் குதிகால் வலி (first step pain).

2.நீண்ட நேரம் உட்கார்ந்த பிறகு எழும்பும் போது வலி.

3.நடக்க நடக்க வலி குறையும், ஆனால் மாலை அதிகரிக்கும்.

இது பெரும்பாலும் குதிகால் முள் (calcaneal spur) உடன் தொடர்புடையது. நீண்ட நாள் தசைநார் இழுவை காரணமாக எலும்பில் calcium சேர்ந்து முள் போல் வளரும். ஆனால் முள் தான் வலிக்கு காரணம் அல்ல, வீக்கமே முதன்மையான காரணம்.பிளாண்டார் ஃபெசைட்டிஸ் வலி பெரும்பாலும் ஆரம்ப சிகிச்சையால் குணமாகும், 90% பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதில்லை. படிப்படியாக ஆரம்பம், இடைநிலை, மேம்பட்ட என்று வகை பிரித்து சிகிச்சை அளிப்பர்..

1. ஆரம்ப சிகிச்சை (Conservative – முதல் 6-12 மாதங்கள்)

இது மிக முக்கியமாக வலி குறைப்பு, வீக்கம் தணித்தலில் பங்கு பெறுகிறது.

i.ஓய்வு மற்றும் ஐஸ்கட்டி சிகிச்சை:வலி உள்ள போது ஓய்வெடுத்தல்.

பாட்டிலில் நீர் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து அந்த ஐஸ் நிரம்பிய பாட்டிலை பாத அடியில் வைத்து சிறிது அழுத்தம் கொடுத்து உருட்டுதல். அல்லது, ஐஸ் கட்டியை நேரடியாக பாதத்தில் வைத்து சிறிய மசாஜ் செய்தல். அல்லது, ஐஸ்கட்டி நிறைந்த குளிர்ந்த நீரில் பாதங்கள் அமிழும்படி வைத்திருத்தல் (சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலில் உணர்வு குறைவு இருந்தால் இதை தவிர்க்கலாம்) 10-15 நிமிடங்கள், நாளொன்றுக்கு 3-4 முறை செய்ய வேண்டும்.

டென்னிஸ் பந்தை பாதத்திற்கு அடியில் வைத்து உருட்டுதல்.

ii.ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்:
கெண்டைக்கால் ஸ்ட்ரெச் (Calf stretch):

சுவரில் கை வைத்து பின்னங்கால் நேராக வைத்து முன்னால் சுவரை நோக்கி வளைதல்.

பிளாண்டார் ஃபேசியா ஸ்ட்ரெச்:
உட்கார்ந்து கால் விரல்களை மேலே இழுத்தல் அல்லது டவல் கொண்டு இழுத்தல்.

iii.வலிமையாக்கும் பயிற்சிகள்:

டவல் ஸ்க்ரஞ்ச்: கால் விரல்களால் தரையில் விரித்து வைத்துள்ள டவலை இழுத்தல்/சுருக்குதல்.
மார்பிள் பிக்கப்: கால் விரல்களால் கோலி குண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஒரு பாக்ஸில் போடுதல்.

2. இடைநிலை சிகிச்சை (வலி தொடர்ந்தால்)

i.மேனுவல் தெரபி: மசாஜ், ஜாயின்ட் மொபிலைசேசன்.

ii.ட்ரை நீடிலிங்: தசைநாய்களில் அக்குபங்க்சர் ஊசி செலுத்தி வலி குறைத்தல்.

iii.அல்ட்ரா சவுண்ட் மற்றும் எலக்ட்ரோ பிசியோதெரபி மூலம் வீக்கம் குறைத்தல்.

இந்தப் பயிற்சிகளை குறைந்தது. 6 முதல் 12 மாதங்கள் வரை செய்ய வேண்டும். சிலருக்கு மூன்று மாதங்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரியும்.. பெரும்பாலும் பிசியோதெரபி சிகிச்சைக்கு வரும்போது ஏழு நாட்கள் அல்லது பத்து நாட்களிலேயே சரியாகிவிட வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆரம்பகட்ட சிகிச்சையில் வலியும் வீக்கத்தையும் தான் குறைக்க முடியும். ஆனால் தொடர் பயிற்சிகளால் மட்டும் தான் இதைச் சரி செய்ய முடியும். ஆகவே வீட்டில் செய்யும் பயிற்சிகளையும் நீண்டகாலத்திற்கு கடைபிடித்தால் மட்டுமே குணமாகும்.சிலர் வலி குறைந்தவுடன் குணமடைந்து விட்டதாக நம்புகின்றனர். வலி என்பது அறிகுறி தானே தவிர அதுவே நோய் அல்ல.

3. மேம்பட்ட சிகிச்சை (அரிது)

i.இன்ஜெக்சன்: ஸ்டிராய்டு அல்லது வலி குறைக்கும் ஊசிகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.
ii.அறுவைசிகிச்சை

6-12 மாதங்கள் தொடர் சிகிச்சைகள் பலனளிக்காமல், தேவைப்பட்டால் plantar fascia release அறுவைசிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். (1%க்கும் குறைவு).

calcaneal spur அதிகமாக வளர்ந்து தொந்தரவு செய்தாலும் சிறிய அறுவைசிகிச்சை மூலம் நீக்குவர்.அறுவைசிகிச்சை செய்தாலும் பாதத்திற்கான பயிற்சிகள் அல்லது வலுவேற்றும் பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

Related Stories: