வேலிப்பருத்தியின் பயன்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழகமெங்கும் வேலிகளில் இதய வடிவிலான இலைகளைக் கொண்டிருக்கும் கொடி வகையினைச் சார்ந்த தாவரமே வேலிப்பருத்தி. வேலிப்பருத்தியின் பயன்பாட்டினை அறிந்து நமது முன்னோர்கள் தொன்றுதொட்டே மூலிகைச் செடியாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது சிறப்பு. இதன் அறிவியல் பெயர் பெர்குலேரியா டேமியா என்பதாகும். இது அஸ்கிலிபிடேசியே எனும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. சித்த மருத்துவத்தில் இச்செடியினை ஆஸ்துமா, சளி, இருமல், வலி, வீக்கம், ரத்த அழுத்தம் போன்றவற்றை தடுக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வேலிப்பருத்திக்கு உத்தம கன்னிகை, உத்தாமணி, அச்சாணி மூலி என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர், காய் என அனைத்து தாவரப்பகுதிகளும் மருத்துவ குணமுடையது. வேலிப்பருத்தி இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், எகிப்து, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது.

தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலுமே கிடைக்கப் பெறுகிறது.இச்செடியில் சிறிய முட்களைக் கொண்ட காய்கள் காணப்படும். இது மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் பூக்களை கொண்டிருக்கும். பொதுவாக இதன் காய்களில் உள்ளிருக்கும் விதைகள் காற்றின் மூலம் பரவி வளருகிறது.

வேலிப் பருத்தியில் காணப்படும் சத்துகள்

*வைட்டமின் ஏ
*வைட்டமின் சி
*கால்சியம்
*மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், சோடியம்.

வேலிப் பருத்தியில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்

*டேனின்கள்
*டெரிபினாய்டுகள்
*பிளேவோனாய்டுகள்
*டானின்
*சாப்டோனின்
*ஸ்டிராய்டுகள்
*கிளைக்கோசைடுகள்.

வேலிப் பருத்தியின் மருத்துவ குணங்கள்

குடல் புண்களை அழிக்க, மலச்சிக்கல் பிரச்னை சரிசெய்ய, ரத்த அழுத்தம், எலும்பு வலிமை, சுவாசக்கோளாறு, வயிற்றுப் பிரச்னை, காய்ச்சல், வீக்கம் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வலியினை தடுக்கவும். கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது.

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீக்கத்தை குறைக்க உதவுகிறது. குடல் புழுக்களை அழிக்க பயன்படுகிறது.வைட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளதால் கண்பார்வை, சருமம் தொடர்பான பிரச்னைகளை குறைக்கிறது. நமது முன்னோர்களால் பாம்பு கடிக்கு மருந்தாக இதனை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த உதவுகிறது. கல்லீரல் பாதுகாப்பினை மேம்படுத்துகிறது.வேலிப்பருத்தியில் உள்ளடங்கிய பைட்டோகெமிக்கல்கள் காரணமாக இத்தாவரம் பல்வேறு மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. எனவே இது ஒரு சிறந்த மூலிகையாக திகழ்ந்தாலும் பயன்பாடு அளவீடு என்பது கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் வேரை உலர்த்தி தூள் செய்து 2 சிட்டிகை அளவுவரை பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளின் வாயு நீங்கி பேதியாகும். பேதியுடன் பூச்சி, கிருமிகள் நீங்கும். வேலிப்பருத்தி இலையை வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல்வாதம், முடக்கு வாதம், வாத குடைச்சல், இடுப்பு வலி முதலியன குணமாகும். வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாதவலி, வீக்கம் குணமாகும். தொடக்க நிலையில் யானைக்கால் நோய் இருந்தால் 48 நாட்களில் குணமாகும்.

5 கிராம் அளவு வேலிப்பருத்தி வேரை பாலில் அரைத்து கலக்கி காலையில் 3 நாட்களுக்கு கொடுக்க கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.ஆஸ்துமா, வீசிங், பித்தம், கால் கை குடைச்சல், ரத்த அழுத்தம் போன்ற மேலும் பல வியாதிகளை போக்கவல்லது வேலிப்பருத்தி. இதன் வேர், இலை ஆகியவை மருத்துவ பயனுடையது.

குழந்தைகளுக்கு: புரதம் மற்றும் கால்சியம் அதிகம், எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.

கர்ப்பிணிகளுக்கு: இரும்பு மற்றும் வைட்டமின் C நிறைந்ததால் ரத்த அளவை சமநிலைக்கு கொண்டு வரும்.

முதியவர்களுக்கு: இதய சுகாதாரம், ஜீரண சக்தி மற்றும் எலும்பு வலிமை பாதுகாக்க உதவும்.

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

Related Stories: