நன்றி குங்குமம் தோழி
தேநீர்… உலகம் முழுதும் விரும்பக்கூடிய ஒரு யூனிவர்சல் பானம். குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை டீயும் பன்னும் இருந்தால் போதும்… சாப்பாட்டையே மறந்துவிடுவார்கள். டீயை குடித்தே சாப்பாட்டை மறப்பவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். சீனப் பேரரசன் ஷென்னாங் மரத்தடியில் அமர்ந்து சுடுநீர் அருந்தும் போது காற்று வீச, அருகிலிருந்த செடியில் இருந்து இலைகள் அவன் அருந்திய தண்ணீரில் விழ, அது நிறம் மாறியது. அதை குடித்த அரசனுக்கு அதன் சுவையும் வாசனையும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியதை உணர்ந்தான். இப்படித்தான் தேநீருக்கு குட்டி ஸ்டோரி சொல்லப்படுகிறது.
தேநீர் அருந்துவது நல்லதா? கெட்டதா? என ஆரோக்கியம் சார்ந்த விவாதங்கள் உலவிக் கொண்டிருக்க, ‘எங்களுக்கு தேநீர்தான் உற்சாகமூட்டியே’ என்று அருந்துபவர்கள் பலர். அவ்வகையில் கொண்டாடப்படும் தேநீர் இன்று பல நிறங்களில் பல ஃப்ளேவர்களில் கிடைக்கின்றன. தற்போது பூக்களில் தயாரிக்கப்படும் தேநீர் பிரபலமாகி வருகிறது. அவை பல சுவைகள் மட்டுமில்லாமல் ஆரோக்கியமும் தருகிறது என்கிறார் ‘அருவி எக்கோ’ நிறுவனர் கலைச்செல்வி. தன் சொந்த பண்ணையில் பூத்த செம்பருத்தி, சங்குப் பூ, ஆவாரம் பூ மற்றும் நெல்லி, கொய்யா இலை ஆகியவற்றில் டீ தூள் தயாரித்து ஆன்லைன் விற்பனையில் அசத்தி வருகிறார்.
‘‘எனக்கு சொந்த ஊர் திருப்பூர் பக்கத்துல இடுவாய் கிராமம். நான் இஞ்சினியரிங் முடித்து எம்.பி.ஏ படித்தேன். அந்த துறையில் பனிரெண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். சிறு வயது முதலே மண், மரம், செடி என சுற்றி வர எனக்கு மிகவும் பிடிக்கும். என் அப்பாவும் மண் சார்ந்துதான் நம் வாழ்க்கைன்னு அடிக்கடி சொல்வார். எங்களுக்கு சொந்தமாக இருந்த பத்து ஏக்கர் தரிசு நிலத்தை பண்ணை நிலமா மாத்தி நெல்லி, கொய்யா, தென்னை, சப்போட்டா ஆகிய மரங்களை நட்டு அப்பா பராமரித்து வந்தார்.
நான் சில காலம் என் குடும்பத்தாருடன் அமெரிக்காவில் வசித்து வந்தேன். திரும்பி வந்த போது எல்லாமே மரங்களாக வளர்ந்து அதிகமான காய் பழங்களாக பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. வெளி கடைகளுக்கு விற்பனைக்கு மற்றும் எங்களின் பயன்பாட்டிற்கு போக மீதியுள்ள பழங்கள், காய்கள் வீணாவதை தடுக்க என்ன செய்வதுன்னு யோசித்த போது, அப்பா ‘Pick your own fruit’ என்ற திட்டத்தை சொன்னார்.
அதாவது, பொது மக்களை பண்ணையில் அனுமதித்து விருப்பம் போல் பழங்கள், காய்கறிகளை பறித்துக்கொள்ளலாம். கடைகளை விட நாங்கள் மிகக் குறைவான விலைக்கு தருவதுடன் எல்லாமே ரசாயனம் இல்லாமல் ஆர்கானிக்காக விளைவித்ததால், மக்களிடையே பெருத்த ஆதரவு வந்தது’’ என்றவர், தான் தொழில் முனைவோராக மாறியதை பகிர்கிறார்.
‘‘எங்க பண்ணையில் பெரிய நெல்லிக்காய் மரங்கள் அதிகம் இருக்கு. காய்களும் அதிகளவில் காய்க்கும். எங்களிடம் பழங்களை வாங்க வருபவர்களிடம் சும்மா கொடுத்தா கூட யாரும் வாங்கிட்டு போக மாட்டாங்க. காரணம், அதன் சுவை. ஆனால், நெல்லிக்காயின் பயன்கள் ஏராளம். பத்து ஆப்பிள்களுக்கு சமமான அவை வீணாவதை நினைத்து அப்பாவுடன் நானும் மிகவும் வருத்தப்படுவேன். அப்பதான் அப்பா மதிப்புக் கூட்டு முறை பற்றி மாத இதழ் ஒன்றில் படித்துவிட்டு என்னிடம் சொன்னார்.
வேளாண் பல்கலைக்கழகத்தின் கேவிகே கிரிஸ் விக்யான் கேன்த்ரா என்ற அமைப்பு விவசாயிகளுக்கு அனைத்து வித உதவிகளையும் செய்வது தெரிந்தது. நான் திருப்பூரில் செயல்படும் மையத்திற்கு செல்லும் போதே நெல்லிக்காய்களையும் கொண்டு சென்றேன்’’ என்றவர், நெல்லிக்காய் மவுத் வாஷ், ஜாம், கேண்டி என மதிப்புக்கூட்டு பொருளாக மாற்றியது குறித்து விவரித்தார் கலைச்செல்வி.
‘உணவு மதிப்புக் கூட்டுப் பிரிவில் சென்று விசாரித்த போது அங்கிருந்த உணவு அலுவலர் அறிவுரையின் படி நெல்லிக்காயை துருவி உப்பும், மிளகும் கொண்டு வர சொன்னாங்க. மறுநாளே அதே போல் கொண்டு சென்றேன். அவர்கள் நெல்லி துருவலில் உப்பும், மிளகும் சேர்த்து ஒருநாள் முழுதும் சோலார் ட்ரையரில் காய வைத்தார்கள். அடுத்த நாள் சாப்பிட்ட போது நெல்லியின் சுவை மாறாமல் அதே சமயம் மேலும் மேலும் சாப்பிட வேண்டும் என்று அதன் சுவை தூண்டியது.
அதுதான் எங்கள் முதல் பிராடக்ட். எப்ப வேண்டுமானாலும் அதை சாப்பிடலாம். அதனைத் தொடர்ந்து நெல்லியில் வேறு என்ன வகையான உணவுகளை தயாரிக்கலாம் என்ற தேடலில் இருந்த போது, தஞ்சாவூரில் NIFTEM என்ற மையத்தில் பதப்படுத்துதல் குறித்து பயிற்சி பற்றி கேள்விப்பட்டேன். அது குறித்த பயிற்சியும் பெற்றேன்’’ என்றவர், நெல்லிக்காயில் ஜாம், கேண்டி என பன்னிரெண்டு வகையான மதிப்புக்கூட்டுப் பொருட்களை உருவாக்கியிருக்கிறார். அதற்கான ஆர்கானிக் தரச் சான்றிதழும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுள்ளார்.
‘‘நெல்லியை தொடர்ந்து சப்போட்டாவிலும் நாங்க ஆய்வு செய்ய ஆரம்பித்தோம். சப்போட்டா பழங்களையும் சோலாரில் காய வைத்து அதனையும் தயார் செய்தோம். அதன் பிறகு மாங்காயினை உப்பு, மிளகாய் தூளினை சேர்த்து காயவைத்து ‘ஸ்பைசி டிரையிடு மேங்கோ’ என்று விற்பனை செய்தோம். மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பண்ணையில் பூக்கும் பூக்களையும் மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்ற நினைத்தேன்.
பெரியகுளத்தில் அமைந்துள்ள தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில் மதிப்புக்கூட்டுப் பயிற்சிகள் சார்ந்த பல வர்க்ஷாப்பில் கலந்து கொண்டேன். அதில் சங்குப் பூ, செம்பருத்தி, ஆவாரம் பூ, கொய்யா இலை, நெல்லி ஆகியவற்றில் டிப் டீ தயாரிப்பு குறித்த பயிற்சி எடுத்து அதனை முயற்சி செய்தேன். மிகவும் சுவையாகவும் நல்ல ஃப்ளேவருடன் இருந்தது. இதில் பல ஆரோக்கியம் சார்ந்த பயன்கள் இருக்கிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, சீரான ரத்த ஓட்டம், செரிமானம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஆகியவற்றிற்கு அருமருந்தாக பயன்படுகிறது. உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் டீடாக்ஸ் பானமாகவும் பயன்படும். மேலும், முருங்கையிலை பவுடர் மற்றும் சூப் பவுடர்களும் விற்பனை செய்கிறேன்.
நானும் என் அப்பாவும் ஆரம்பித்த இந்தப் பயணத்தில் இன்று என் மகன்களும் இணைந்துள்ளார்கள். அவர்களுக்கு தனித்தனி வேலைகள் இருந்தாலும் என் பிசினஸ் பயணத்தில் எல்லோரும் ஆலோசகர்கள். எந்த முடிவுகளும் தன்னிச்சையாக எடுப்பதில்லை. அப்பாவை தொடர்ந்து நான் கையாளும் போது சற்று அட்வான்ஸாக யோசித்தேன். தற்போது என் மகன்களிடம் இக்கால எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன. இப்படி தலைமுறை தாண்டி நாங்கள் மண்ணோடும் மரங்களோடும் பயணிக்கிறோம். அறிவியல், கணினி தொலைத் தொடர்பு என்று முன்னேறினாலும் சாப்பாட்டுக்கு மண்ணையே நம்ப வேண்டியுள்ளது. மண்ணை காப்பாற்றினால் அது பொன்னாக தரும்’’ என்ற நம்பிக்கையில் பயணிக்கிறார் கலைச்செல்வி.
தொகுப்பு: கலைச்செல்வி
