மக்களவையில் பெண் எம்.பி.க்கள் போராடிய வீடியோவை வெளியிட்டு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சனம்!

டெல்லி : மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்டு, அவர்களின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். பிப். 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. பிப். 4 ம் தேதி அன்று மக்களவையில் இந்த தீர்மானத்திற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உரையாற்றுவார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடி அன்று அவைக்கு வரவில்லை.

இதனிடையே பிரதமர் மோடியை நான் தான் வர வேண்டாம் என்று கூறியதாகவும் பெண் எம்பிக்கள் மூலம் பிரதமர் மோடி மீது விரும்பத்தகாத செயல்கள் செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்ததாகவும் சபாநாயகர் ஓம்பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இதனால் மக்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே ஜனாதிபதி உரை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பிரதமர் மோடி அன்று மக்களவைக்கு வராதது குறித்து இரு தரப்பு எம்.பி.க்களும் பேசி வரும் நிலையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு, பிப். 4 அன்று எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் மக்களவையில் ஆர்ப்பாட்டம் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பிரதமர் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜோதிமணி, சுதா மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சி தங்களது எம்.பி.க்களின் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்வதாகவும் கிரண் ரிஜிஜூ சாடியுள்ளார். பாஜக பெண் எம்.பி.க்களை தடுத்து நிறுத்தாமல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்களை எதிர்கொள்ள அனுமதித்திருந்தால் அருவருக்கத்தக்க சம்பவத்திற்கு வழிவகுத்திருக்கும் என்றும் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறையுடன் இருப்பதாகவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

Related Stories: