தமிழக டென்னிஸ் வீரர் அபார சாதனை: தனி ஒருவன் தக்சிணேஸ்வர்; டேவிஸ் கோப்பை போட்டியில் சாகசம்; நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

பெங்களூரு: டேவிஸ் கோப்பை முதல் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் தமிழக வீரர் தக்சிணேஷ்வரின் அபார ஆட்டத்தால், இந்தியா, 3-2 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. டேவிஸ் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வந்தன. இதில் இந்திய அணி, பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை எதிர்த்து களம் கண்டது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல், நெதர்லாந்தின் கைடென் ஒடெனிடம் தோல்வியை தழுவினார். ஆனால் மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் தக்சிணேஸ்வர் சுரேஷ் (25), நெதர்லாந்தை சேர்ந்த உலகின் 88ம் நிலை வீரர் ஜெஸ்பர் டிஜாங்கை, 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அசத்தினார்.

அதன் பின் நடந்த இரட்டையர் பிரிவு போட்டியில் தக்சிணேஸ்வர், யூகி பாம்ப்ரி இணை, நெதர்லாந்தின் டேவிட் பெல், சாண்டர் அரெண்ட்ஸ் இணையை வீழ்த்தியதை அடுத்து, இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்த போட்டியில் சுமித் நாகல், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டிஜாங்கை எதிர்கொண்டார். அதில் சிறப்பாக ஆடிய ஜெஸ்பர், 5-7, 6-1, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். அதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 5வது போட்டி தக்சிணேஸ்வர், நெதர்லாந்தின் கை டென் ஒடென் இடையே நடந்தது. அதில், அட்டகாச ஆட்டத்திறனை வெளிப்படுத்திய தக்சிணேஸ்வர், 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடினார். இதனால், 3-2 என்ற செட் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறியது. வரும் செப்டம்பரில் நடக்கும் 2வது சுற்றில் இந்திய அணி, கொரியாவுடன் மோதவுள்ளது.

* பாராட்டு மழையில் மதுரையின் மைந்தர்
டேவிஸ் கோப்பை போட்டியில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை இந்தியா வெற்றி காண, முழு காரணமாக இருந்தவர் தமிழகத்தின் தக்சிணேஸ்வர். இவர் ஆடிய 3 போட்டிகளிலும் பலம் வாய்ந்த நெதர்லாந்து வீரர்களை அநாயாசமாக வீழ்த்தியதால், இந்திய அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. நெதர்லாந்து அணியை தனி ஒருவனாக போராடி வீழ்த்திய தக்சிணேஸ்வருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 6.5 அடி உயரம் கொண்ட தக்சிணேஸ்வர் மதுரையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: