சந்தோஷ் கோப்பை கால்பந்து சர்வீசஸ் சாம்பியன்

 

தகுவாகானா: சந்தோஷ் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் நேற்று, பலம் வாய்ந்த கேரளா அணியை, சர்வீசஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டிகள் அசாமில் நடந்து வருகின்றன. தகுவாகானா நகரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் கேரளா – சர்வீசஸ் அணிகள் மோதின.

இரு அணிகளும் துவக்கம் முதல் ஆக்ரோஷமாக ஆடி கோல் போடுவதில் முனைப்பு காட்டின. இருப்பினும் இரு அணி வீரர்களும் சரிசமமாக மோதியதால் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்திலும் அதே நிலை நீடித்தது. அதனால், கோல்கள் விழாமல் சமநிலை தொடர்ந்ததால் கூடுதல் நேரம் தரப்பட்டு போட்டி நடந்தது. 105வது நிமிடத்தில் கேரளாவின் முகம்மது ரியாஸ் உதைத்த பந்து அநேகமாக கோலாகும் வாய்ப்பு காணப்பட்டது.

அதை சர்வீசஸ் அணியின் ககன்தீப் சிறப்பாக ஆடி தடுத்ததால் போட்டி மேலும் விறுவிறுப்படைந்தது. போட்டியின் 109வது நிமிடத்தில் சர்வீசஸ் அணியின் அபிஷேக் பவார் அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று சிறப்பான வகையில் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார். அதன் பின் ஆட்டம் முடியும் வரை வேறு கோல் விழாததால், 1-0 என்ற கோல் கணக்கில் சர்வீசஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தை அந்த அணி தட்டிச் சென்றது. இந்த தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றின்போதும், கேரளாவுக்கு எதிராக அபிஷேக் பவார் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றி பெறச் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: