கொல்கத்தா: இத்தாலி அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று, ஸ்காட்லாந்து அணி அட்டகாசமாக ஆடி 73 ரன் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் ஸ்காட்லாந்து – இத்தாலி அணிகள் மோதின. டாஸ் வென்ற இத்தாலி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜார்ஜ் முன்ஸே, மைக்கேல் ஜோன்ஸ், இத்தாலி பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், 14வது ஓவரில் ஜார்ஜ் (54 பந்து, 2 சிக்சர், 13 பவுண்டரி, 84 ரன்) ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் மைக்கேல் ஜோன்ஸ் 37 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த பிராண்டன் மெக்கல்லம், கேப்டன் ரிச்சி பெரிங்டன் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் ஸ்காட்லாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. மெக்கல்லம் 38 பந்துகளில் 41 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பின், 208 ரன் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி இத்தாலி அணி களமிறங்கியது.
அந்த அணியின் துவக்க வீரர் ஜஸ்டின் கமாஸ்கா முதல் பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். பின் வந்த ஜேஜே ஸ்மட்ஸ் 22 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் மோஸ்கா 13 ரன்னில் அவுட்டானார். பின் வந்த வீரர்கள் ஸ்காட்லாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 16.4 ஓவரில் இத்தாலி 134 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அதனால், ஸ்காட்லாந்து அணி 73 ரன் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்தது. ஸ்காட்லாந்து தரப்பில் மைக்கேல் லீஸ்க் 4 ஓவரில் 17 ரன் மட்டுமே தந்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆட்ட நாயகனாகவும் அவரே தேர்வு செய்யப்பட்டார்.
