ரூ.60 ஆயிரம் லஞ்சம் உதவி கமிஷனர் கைது: கணவரும் சிக்கினார்

கோவை: கோவை வணிக வரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி (48). இவரிடம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர் தன் நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்திய வரியை (இன்புட் வரி) திரும்ப பெற விண்ணப்பித்து இருந்தார். இதற்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என அபினேஷ் தெரிவித்த நிலையில், இறுதியாக 60 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில் அபினேஷ் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.

அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பொடி தடவிய பணத்துடன் அபினேஷ் நேற்று சென்றுள்ளார். அப்போது உதவி ஆணையர் மகேஸ்வரி, தனசேகரன் (52) என்பவரிடம் பணத்தை அளிக்க கூறியுள்ளார். இதையடுத்து, கொடிசியா மைதானம் அருகில் காரில் காத்திருந்த தனசேகரனிடம் அபினேஷ் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனசேகரனை பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது அவர் உதவி ஆணையர் மகேஸ்வரியின் கணவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தனசேகரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர், உதவி ஆணையர் மகேஸ்வரி மற்றும் தனசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: