கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அதிமுக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: மனைவி கைது; காதலன் உட்பட 3 பேர் சரண்

மதுரை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மதுரையில் அதிமுக நிர்வாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மனைவி கைதானார். கள்ளக்காதலன் உட்பட 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர். மதுரை, திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரபாண்டியன் (எ) செந்தில்குமார் (36). மனைவி காவியா. 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில்குமார் சாமநத்தம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் ஒன்றிய செயலாளராக இருந்தார்.

சாமநத்தம் பள்ளிக்கூடம் அருகே டீக்கடையும் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு செந்தில்குமார் டீக்கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். செந்தில்குமாரின் கையை வெட்டியும், முகத்தை சிதைத்தும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடியது.

இக்கொலை தொடர்பாக எஸ்பி அரவிந்த் உத்தரவின்பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமாரின் மனைவி காவியாவுக்கும், அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. 2 மாதத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியூர் சென்று விட்டனர். காவியாவின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் தம்பதியை சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் காவியா, கார்த்திக்கிடம் செல்போனில் அடிக்கடி பேசி தொடர்பை நீடித்து வந்துள்ளார்.

வீட்டிலிருந்த பணத்தையும் அவரிடம் அதிகளவில் கொடுத்துள்ளார். தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதையறிந்த செந்தில்குமார் கோபமடைந்து, மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு அவனியாபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு காவியா சென்றார். அப்போது பெற்றோர், ‘‘கணவருடன் சேர்ந்து வாழ். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியே செல்’’ எனக் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த காவியா அவனியாபுரம் போலீசில் தந்தை மீது புகார் கொடுத்துள்ளார். போலீசார் தந்தையை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். நடந்த சம்பவம் அனைத்தையும் கார்த்திக்கிடம் கூறியுள்ளார். அப்போது, ‘‘இனி என் கணவர் உயிருடன் இருந்தால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது. அவரை ஏதாவது செய்து விடு’’ என்று கார்த்திக்கிடம் காவியா கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து செந்தில்குமாரை தீர்த்துக் கட்ட முடிவு செய்த கார்த்திக், நண்பர்கள் 6 பேருடன் ஆட்டோ மற்றும் டூவீலரில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமாரின் டீக்கடைக்கு வந்துள்ளனர்.

அப்பகுதியில் மது அருந்தி விட்டு, விடிய, விடிய காத்திருந்துள்ளனர். மறுநாள் டீக்கடையை திறக்க வந்த செந்தில்குமாரை, பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொன்றுள்ளனர். கும்பலை தேடி வந்த நிலையில் கள்ளக்காதலன் கார்த்திக் உட்பட 3 பேர், சிலைமான் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். பின்னர் காவியா கைதானார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டி தீர்த்துக் கட்டிய மனைவியால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: