மசாஜ் சென்டரில் ‘ஹேப்பி எண்ட்’ சொல்லாததால் பெண் ஊழியர்களிடம் கத்தி முனையில் நகை, செல்போன்கள் பறித்த 3 ரவுடிகள் கைது: தலைமறைவாக உள்ள 2 பேருக்கு வலை

 

சென்னை: மசாஜ் சென்டரில் ‘ஹேப்பி எண்ட்’ சொல்லாததால் ஆத்திமடைந்து 3 பெண் ஊழியர்களிடம் கத்திமுனையில் 10 கிராம் தங்கம் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற 3 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வேளச்சேரி பகுதியில் முறையான அனுமதியுடன் பிரபல மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மசாஜ் சென்டருக்கு கடந்த 7ம் தேதி இரவு 7.30 மணிக்கு 5 பேர் வந்தனர். அவர்களில் 4 பேர் மசாஜ் செய்து கொண்டனர். ஒருவர் மட்டும் குடிபோதையில் இருந்ததால் அவருக்கு மசாஜ் செய்ய இளம் பெண்கள் மறுத்துவிட்டனர். இருந்தாலும் பணம் அதிகம் கொடுப்பதாக கூறியதால் அந்த போதை ஆசாமிக்கும் மசாஜ் செய்ய பெண் ஊழியர்கள் ஒப்புக்கொண்டனர். பின்னர் மசாஜ் முடிந்த பிறகு போதை ஆசாமியிடம் பெண் ஊழியர் ‘ஹேப்பி எண்ட்’ சொல்லாமல் வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தன்னுடன் வந்த 4 நண்பர்களிடம் போதை ஆசாமி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் மசாஜ் சென்டரில் பணியாற்றும் தனலட்சுமி, ஷாலினி, பிரியங்கா ஆகியோரிடம் தகராறில் ஈடுட்டு, திடீரென கத்தி முனையில் 3 பேரிடம் 10 கிராம் தங்க நகைகள் மற்றும் செல்போன்களை பறித்தனர். அதோடு இல்லாமல் மசாஜ் சென்டரில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் டிவிஆர், மாணிட்டரை கழற்றி எடுத்து சென்றுவிட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பெண்கள் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மசாஜ் சென்டருக்கு அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, 5 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த ரவுடி வீரமருது(35), அவரது கூட்டாளிகளான பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த ஆனந்த்குமார்(எ)பில்லி பவுல்(42), 15 குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை ேசர்ந்த ரவிக்குமார்(எ)ராக்கப்பன்(48) மற்றும் அவரது நண்பர்கள் என தெரியவந்தது.

அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் அதிரடியாக வீரமருது, ஆனந்த்குமார், ரவிக்குமார் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5கிராம் தங்க நகைகள், 5 செல்போன்கள், 2 கத்திகள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Related Stories: