உடுமலை தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன். அதேபோல், மடத்துக்குளம் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.பி., சி.மகேந்திரன் எம்.எல்.ஏவாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் சூப்பர் சீனியர் முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேல். இவர் தற்போது அ.ம.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக உள்ளார்.
சண்முகவேல் ஏற்கனவே உடுமலை தொகுதியில் இரண்டு முறையும், மடத்துக்குளம் தொகுதியில் ஒருமுறையும் வெற்றி பெற்றவர் என்பதால், இரண்டு தொகுதியிலும் நல்ல அறிமுகம் உள்ளது. கடந்த 2021 தேர்தலில் மடத்துக்குளம் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு சண்முகவேல் தோல்வியை தழுவினார்.
அதிமுக கூட்டணியில் தற்போது அமமுக இணைந்துள்ளதால், உடுமலை அல்லது மடத்துக்குளம் தொகுதியை சண்முகவேல் குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். அதனால், இந்த இரண்டு தொகுதி அதிமுக எம்எல்ஏக்கள், ‘‘நமக்கு மீண்டும் சீட் கிடைக்காது போல…’’ என பேசி வருகின்றனர்.
உடுமலை தொகுதி ராதாகிருஷ்ணனுக்கும், மடத்துக்குளம் தொகுதி மகேந்திரனுக்கும் அதிமுகவில் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டு, கடந்த 6 மாதத்துக்கு முன்பிருந்தே இருவரும் முன்னேற்பாடு பணிகளை தொடங்கிவிட்டனர். ஆனால், உடுமலை அல்லது மடத்துக்குளம் தொகுதிகளில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட வேண்டும் என்பதில் சண்முகவேல் குறியாக இருப்பதால், தொண்டர்களிடையே கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்பதால், சண்முகவேலுக்கு ஆதரவாகவே தலைமை இருக்கும் என கூறப்படுகிறது. அதனால், 2 சிட்டிங் எம்எல்ஏக்களில் ஒருவர் சீட் பறிபோய்விடும் என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது. பறிபோகும் அந்த எம்எல்ஏ யார்? என்ற கேள்வி இருவருக்கும் கலக்கததை ஏற்படுத்தி உள்ளது.
