திருச்சி: சட்டமன்ற தேர்தல் வரும் ஏப். 23ம் தேதி நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசுபொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக்குழுக்களை அமைத்து சோதனை நடத்தப்பட்ட வருகிறது. இந்நிலையில் ரயில்களில் பரிசு பொருட்கள், பணம் கொண்டு செல்லப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க ரயில்வே போலீஸ் நிலையங்கள் வாரியாக தனிப்படைகள் அமைத்து சோதனை மேற்கொள்ள ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்பிக்களுக்கும், டிஎஸ்பிக்களுக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘சட்டமன்ற தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் ரயில்களில் பணம், பரிசு பொருட்கள் கடத்திச் செல்லப்படுவதை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு ரயில்வே போலீஸ் நிலையங்களிலும் ஒரு எஸ்ஐ தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்க வேண்டும்.
அந்த தனிப்படையினர் தொடர்ந்து ரயில்களில் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி திருச்சி ரயில்வே காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தனிப்படையினரால் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று திருச்சி ரயில் நிலையத்தில் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகளில் மெட்டல் டிடெக்டர், மோப்பநாயுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
