நவரை பட்டத்தில் அறுவடையில் மும்முரம் குமரியில் சுட்டெரிக்கும் வெயில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை அதிகரிப்பு

*சிவப்பு இளநீர் ரூ.60க்கு விற்பனை

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் இரு பருவமழை பெய்வதுடன், கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை முதல் காலை வரை பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் இரவு நேரங்களில் குளிர்ச்சியான சீதோ‌ஷண நிலை நீடித்தது. தற்போது பனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் பகல் வேளையில் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. கடும் வெயிலால், இளநீர், குளிர்பானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஒரு கிலோ தர்பூசணி பழம் ரூ.18க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்பானங்களை வாங்கி பருகுகின்றனர். இந்த வெப்பத்தை தொடர்ந்து கரும்பு உள்ளிட்ட ஜூஸ்கள், குளிர்பானங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதுபோல் இளநீர் விற்பனையும் அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டம் பணக்குடி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிவப்பு இளநீர் கொண்டுவரப்படுகிறது. அங்கிருந்து குமரிக்கு வரும் சிவப்பு இளநீர் ஒன்று ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பழவியாபாரி ஒருவர் கூறியதாவது:

குமரி மாவட்டத்திற்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து அதிக சிவப்பு இளநீர் விற்பனைக்கு வருகிறது. கடந்த காலத்தில் அதிக அளவு வந்த இளநீர், தற்போது தேவை அதிகரித்துள்ள நிலையில் நாம் கேட்கும் அளவிற்கு கிடைக்கவில்லை.

நெல்லை மாவட்டத்தில் இருந்து குறைந்த அளவு இளநீர் வருவதாலும், தேவை அதிகமாக இருப்பதாலும், அதிக விலைகொடுத்து கொள்முதல் செய்யவேண்டி உள்ளது. இதனால் ஒரு சிவப்பு இளநீர் ரூ.60க்கு விற்பனை செய்யவேண்டிய நிலை உள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து அதிக இளநீர் வரும் பட்சத்தில் இளநீர் விலையும் குறையும் என்றார்.

Related Stories: