சென்னை: டபுள் இன்ஜின் அல்ல, தமிழ்நாடு எப்போதும் திராவிட இன்ஜின்தான் என்று திமுக எம்எல்ஏ எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கானது அல்ல; இது மாநில உரிமைகளுக்கான தேர்தல், தமிழர்களின் சுயமரியாதையைக் காக்கும் தேர்தல். ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரத் துடிக்கும் ஒன்றிய அரசின் மொழித் திணிப்பு, பண்பாட்டுத் திணிப்பு மற்றும் மதவாதக் கொள்கைகளை எதிர்த்து முறியடிப்பதற்கான களம் இது. தமிழ்நாட்டின் கல்வி, மருத்துவம், தொழில் மற்றும் கட்டுமானத் துறைகளில் ஏற்பட்டுள்ள மாபெரும் வளர்ச்சியை உலகமே வியந்து பார்க்கிறது. ‘நம்பர் ஒன் ஸ்டேட், சூப்பர் ஸ்டேட்’ என்ற பெருமையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பெற்றுத் தந்துள்ளது.
எதிர்த்தரப்பில் நிற்பது ஏற்கனவே மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. அது பாஜக, அதிமுக, பாமக, டிடிவி தினகரன் ஆகியோர் அடங்கிய ‘டெல்லி கூட்டணி’. எடப்பாடி பழனிசாமி 2019 முதல் இதுவரை 10-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தொடர் தோல்வியைத் தழுவியுள்ளார். அவர் பேசுவது ஒன்று, செய்வது ஒன்றாக இருப்பதால்தான் மக்கள் அவரைத் தொடர்ந்து நிராகரிக்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் ‘டபுள் இன்ஜின்’ என்று கூறி வந்தார்கள்.
ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது எப்போதுமே ‘திராவிட இன்ஜின்’ தான்.2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு புயல் பாதிப்பின் போது 1000 ரூபாய் தருகிறேன் என 110 விதியின் கீழ் அறிவித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிந்ததும் அந்தப் பேச்சையே எடுக்கவில்லை. கொரோனா காலத்தில் மக்கள் 5000 ரூபாய் கேட்டதற்கு, நிதி இல்லை என்று கூறி வெறும் 1000 ரூபாய் மட்டுமே கொடுத்தார்.
மகளிர் உரிமைத் தொகையை திமுக அறிவித்தபோது, ‘நிதி இல்லை, இது சாத்தியமே இல்லை’ என்று விமர்சித்தவரும் அவர்தான். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 1 கோடியே 18 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளார். ஒன்றிய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்த போர்ச் சூழலில், இந்த 1000 ரூபாயும், வெள்ள நிவாரணமாக வழங்கப்பட்ட 6000 ரூபாயும் மக்களுக்குப் பேருதவியாக அமைந்தன என்பதை எவரும் மறுக்க முடியாது.
திமுக கூட்டணியில் விரிசல் எனச் சிலர் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகிறார்கள். தொகுதிப் பங்கீட்டில் திமுக பெரிய அண்ணன் மனப்பான்மையோடு ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறுகிறார்கள். ஆனால், எங்கள் கூட்டணியில் இருப்பது ஆதிக்க மனப்பான்மை அல்ல, ‘சகோதரத்துவ மனப்பான்மை’ மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்றி விடக்கூடாது என்ற ஒற்றைக் கொள்கைக்காகவே நாங்கள் இணைந்துள்ளோம்.
வெற்றி வாய்ப்பு மற்றும் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும் தேர்தல் முறை ஆகியவற்றின் அடிப்படையில்தான் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவே தவிர, எங்கள் கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, தேமுதிக என அனைவரும் சுமுகமாகப் பேசி, மனமுவந்து கையெழுத்திட்டுத்தான் தேர்தல் களத்திற்குச் செல்கின்றனர்.
எங்கள் தேர்தல் அறிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. 2021-ல் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை (85%) நிறைவேற்றிச் சாதனை படைத்துள்ளது. ஆனால், 2016-ல் அதிமுக கொடுத்த வாக்குறுதிகளில் 33 சதவீதத்தைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை என்பதுதான் உண்மை. பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கல்விக் கடன் தள்ளுபடி போன்ற சில வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு முழுக்காரணம் ஒன்றிய அரசுதான்.
இதற்கான சட்ட வரைமுறைகளும், நாடாளுமன்ற அனுமதியும் ஒன்றிய அரசின் கைகளிலும்தான் உள்ளன. இதனாலேயே மாநில அரசால் அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி மத்தியில் அமைந்தால், இந்தத் தடைகள் அனைத்தும் உடைக்கப்பட்டு விடுபட்ட வாக்குறுதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை, மக்களிடம் நேரடியாகக் கருத்துகள் கேட்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது. அது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு ‘டிரெய்லராக’ அமையும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
