அரக்கோணத்துக்கு குறி வைத்த ஜெகன்

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1.91 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தற்போது, அரக்கோணம் எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த சு.ரவி உள்ளார். இவர், அதிமுகவில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில், சு.ரவியே மீண்டும் அரக்கோணம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டுள்ளார்.

இதற்கிடையில், தே.ஜ. கூட்டணியில் உள்ள புரட்சி பாரதம் கட்சியும் அரக்கோணத்தில் போட்டியிட முனைப்பு காட்டி வருகிறதாம்.புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி தற்போது கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். 2026 தேர்தலில் தே.ஜ. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி 4 தொகுதி கேட்டு பெறலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. அவ்வாறு தொகுதிகள் கிடைத்தால் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியை முக்கிய தொகுதியாக கருதி அதனை கேட்க உள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதற்கேற்ப அரக்கோணம் பகுதியில் புரட்சி பாரதம் கட்சி மீட்டிங் சமீபத்தில் போடப்பட்டது.

அப்போதும், அரக்கோணம் தொகுதியை கேட்டு பெறலாம். அதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளது என பேசப்பட்டது. இதனால், புரட்சி பாரதம் கட்சியின் பார்வை, அரக்கோணம் தொகுதி மீது விழுந்துள்ளது. ஏற்கனவே, 2006ல் திமுக கூட்டணியில் ஜெகன்மூர்த்தி, அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி தலைமை, இலை நிர்வாகிக்கு சீட் கொடுத்து கட்சிக்காரங்களுக்கு கை கொடுக்குமா? கூட்டணிக்கு சீட்டு விட்டு கொடுத்து கைவிடுமா? என்று பெரிய கேள்வி எழுந்திருக்குது. இதனால் தற்போதைய அதிமுக சிட்டிங் எம்எல்ஏ பதற்றத்தில் இருந்து வருகிறார்.

Related Stories: