வயல்கள் சேறும் சகதியுமாக உள்ள நிலையில் பெல்ட் வீல் இயந்திரம் தட்டுப்பாட்டால் அறுவடை பணிகள் கடும் பாதிப்பு நெல்மணிகள் உதிர்வதால் விவசாயிகள் கவலை

கீழ்வேளுர், பிப். 3: நாகை மாவட்டத்தில் வயல்கள் சேறும், சகதியாக உள்ள நிலையில் பெல்ட் வீல் அறுவடை இயந்திரம் தட்டுப்பாட்டால் அறுவடை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களிலேயே முற்றிய நெல்மணிகள் உதிர்வதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். காவிரி டெல்டா மாவட்டத்தில் இந்தாண்டு சம்பா, தாளடி நெற்பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. விவசாய தொழிலாளர்கள் குறைந்து விட்ட நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் இயந்திரம் மூலம் 95 சதவீத அறுவடை நடந்து வருகிறது. அறுவடை இயந்திரங்களின் சக்கரம் டயர்கள் கொண்டதாகவும், பெல்ட் வீல் கொண்டதாகவும் உள்ளது. டயர் அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்ய வேண்டும் என்றால் வயல்களின் தரை ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும்.

பெல்ட் வீல் கொண்டதாக உள்ள அறுவடை இயந்திரம் கொண்டு சேராக உள்ள வயலில் இறங்கி அறுவடை செய்யலாம். நாகை மாவட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் இருந்தும் 300க்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் வந்துள்ளது. அறுவடை ஒரே நேரத்தில் நடப்பதால் குறைந்தபட்சம் 700 அறுவடை இயந்திரங்கள் இருந்தால் தான் நாகை மாவட்டத்தில் அறுவடை பணியை தொய்வின்றி காலத்தில் முடிக்க முடியும். இந்நிலையில் கடந்த மாதம் ஜனவரி 15ம் தேதி வரை மழை பெய்ததால் வயல்கள் காயாமல் சேறும் சகதியுமாக உள்ளதால் பெல்ட் வீல் கொண்ட இயந்திரங்கள் கொண்டு மட்டுமே அறுவடை செய்யலாம் என்ற நிலை உள்ளது.

தற்போது நாகை மாவட்டத்தில் வயல்கள் காயாமல் உள்ளதால் பெல்ட் வீல் கொண்ட இயந்திரம் மட்டுமே அறுவடை பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக டயர் வீல், பெல்ட் வீல் கொண்ட அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டால் அறுவடை பணி தொய்வில்லாமல் இருக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில் அறுவடைக்கு பெல்ட் வீல் இயந்திரம் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. சம்பா, தாளடி நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் பெல்ட் வீல் இயந்திரங்கள் குறைந்த அளவில் உள்ளதால் அறுவடை பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் உளுந்து, பச்சை பயறு பயிர்கள் தெளித்து ஒரு வாரத்துக்கு மேலாகிய நிலையில் உளுந்து, பச்சை பயறு செடிகள் முளைத்து அதிக உயரம் வளர்வதற்கு முன் குறிப்பிட்ட நாட்களுக்குள் நெல் அறுவடை செய்தால் மட்டுமே உளுந்து, பச்சை பயறு பயிர்கள் சேதம் இல்லாமல் இருக்கும். பெல்ட் இயந்திரம் கொண்டு மட்டுமே அறுவடை செய்தால் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் சாய துவங்குவதுடன் நெல்கள் முற்றி வயலிலேயே நெல்மணிகள் உதிரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நாகை மாவட்டத்துக்கு கூடுதலாக பெல்ட் அறுவடை இயந்திரம் வரவழைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: