தமிழக சட்டப்பேரவையில் பிப்.17ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

நெல்லை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற பிப்.17ம் தேதி தொடங்குகிறது. அன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடுத்த ஓரிரு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் நிலையில் பட்ஜெட்டில் புதிய சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி முதல் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது அவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம் சாட்டி அவரது உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு கவர்னரின் தமிழாக்க உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இரண்டாவது நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 22, 23ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது.

தொடர்ந்து ஜன.24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். இதைத் தொடர்ந்து 9 சட்ட முன்வடிவுகள் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி:

தமிழ்நாடு சட்டப்பேரவை 26(1)ன் கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத் தொடர் பிப்.17ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டமன்றப் பேரவையில் கூட்டப்படவுள்ளது. அன்று 2026-27ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசால் வாசித்து அளிக்கப்படும். பிப்.20ம் தேதி சட்டமன்ற பேரவை விதி 193 (1)ன் கீழ் 2026-27ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கையும், சட்டமன்ற பேரவை விதி 189(1)ன் கீழ் 2025 – 26ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகளும் சட்டமன்றத்தில் வாசித்து அளிக்கப்படும்.

இந்த சட்டமன்றக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு, அன்று எனது தலைமையில், எனது அறையில் கூடி முடிவு செய்யும். சட்டமன்றம் தொடங்கிய நாள் முதல் எல்லா நிகழ்வுகளும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் பார்த்துக் கொள்ளலாம். சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு நேரம் கொடுக்கவில்லை என்பது மக்களவையை பற்றி கூறுகிறீர்கள்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் எதிர்க்கட்சிகளுக்கு உரிய நேரம் கொடுக்கப்படுகிறது. சட்டமன்ற பேரவையின் நேரடி ஒளிபரப்பு, கேள்வி நேரம், அமைச்சரின் பதில் உரைகள், சிறப்பு தீர்மானம் உள்ளிட்ட ஒரு சில நிகழ்வுகள் தற்போது நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதம் உள்ளிட்ட முழுமையான நேரடி ஒளிபரப்பு எதிர்காலத்தில் செய்யப்படும்.

சட்டமன்றப் பேரவையில் முழு நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியாக உள்ளார். நிச்சயமாக நடக்கும். 16வது சட்டமன்றப் பேரவையின் கூட்டத் தொடர் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பை நெல்லையில் வைத்து அறிவித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

இந்த சட்டப் பேரவையின் கடைசி கூட்டத் தொடர் என்பதாலும், சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதாலும் இடைக்கால பட்ஜெட்டில் புதிய சலுகைகள், அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதனால் வருகிற பிப்.17ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

Related Stories: