பெங்களூருக்கு விமானத்தில் பயணித்த அரசு பள்ளி மாணவர்கள்

 

திருச்சி: விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்தாலும், நடுத்தர மக்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இன்றும் அது எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் கனவுகளும் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவர்களை தங்களது சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்ற ஒரு மகிழ்வான நிகழ்வு நடந்தேறி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா சேதுராப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கனவுகளை நனவாக்கியுள்ளனர் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் மற்றும் சக ஆசிரியர்கள்.

இதற்காக 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சிறப்பு தேர்வும், வினாடி வினா போட்டியும் நடத்தப்பட்டு, ஒவ்வொரு வகுப்பிலும் அவற்றில் வெற்றிபெற்ற தலா இருவர் வீதம் 12 மாணவ, மாணவிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விமானம் மூலம் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று காலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இதுவரை கண்டிராத பூரிப்புடன், முதன்முறையாக விமானத்தில் பயணிக்க போகும் உற்சாகத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.

பெங்களூருவில் சட்டமன்றம், விஸ்வேசர்யா மியூசியம், திப்புசுல்தான் அரண்மனை, லால்பார்க் போன்ற இடங்களை சுற்றி பார்த்து அங்குள்ள மக்களிடம் உரையாடி மகிழ்ந்து பின்னர் சொந்த ஊர் திரும்புகின்றனர். இந்த சுற்றுலா மூலம், மாணவ மாணவிகளின் கல்வி மேம்படும். மற்ற மாநில மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அரசுபள்ளி மாணவர்களின் விமான பயண கனவும் நனவாகிறது என்று தலைமையாசிரியர் முத்துக்கருப்பன் கூறினார்.

Related Stories: