திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்புடைய 230 ஏக்கர் நிலம் மீட்பு: இன்று அதிகாலை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

 

 

திருப்போரூர்: திருப்போரூரில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கந்தசுவாமி கோயிலின் முதல் ஆதீனம் சிதம்பர சுவாமிகளுக்கு திருப்போரூர், தண்டலம் கிராமங்களில் உள்ள சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்களையும் திருப்போரூர் கிராமத்தையும் ஆற்காடு நவாப் தானமாக அளித்ததாக செப்பு பட்டயங்கள் உள்ளன. இந்நிலையில், இக்கோயிலில் தொடர்ச்சியாக வந்த ஆதீனங்கள், கோயிலுக்கு பணியாற்றிய குருக்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், விளக்கு ஏற்றியவர் என பலருக்கும், அவர்களின் குடும்ப சூழ்நிலை கருதி 21 வகையான மானியங்கள் வழங்கப்பட்டது.

இவை போக, மீதமுள்ள சுமார் 460 ஏக்கர் விவசாய நிலங்கள் தற்போது கந்தசுவாமி கோயிலின் பெயரில் வருவாய்த்துறை பட்டா தாக்கலாகி உள்ளது. இதற்கிடையே, அப்போதைய ஆதீனங்கள் சம்மதத்துடன் உள்ளூர் விவசாயிகளுக்கு கோயிலுக்கு சொந்தமான 460 ஏக்கர் விவசாய நிலங்கள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனிநபர்களிடம் இருப்பதாகவும், அவற்றை மீட்டு, மீண்டும் கோயில் நிர்வாகத்தின்கீழ் கொண்டு வரவேண்டும் என்று சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத் என்பவர், கடந்த 2020ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு தனிநபர்களிடம் இருந்து கோயில் நிலங்களை மீட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும், நிலங்களை மீட்கும் பணி தாமதமானது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தனிநபர்களிடம் இருந்து 21 நாட்களுக்குள் கோயில் நிலங்களை மீட்டு, வரும் 10ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, கடந்த 30ம் தேதி அறநிலையத்துறை மற்றும் போலீசார் இணைந்து, தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் விவசாய நிலங்களில் பெயர் பலகை மற்றும் எச்சரிக்கை அறிவிப்பு பலகை நடும் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் உள்பட பலர், அறிவிப்பு பலகைகளை அடித்து நொறுக்கி, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒரு வார கால அவகாசம் அளிப்பது என்றும் அதற்குள் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்று கொள்ளலாம் என்றும், தவறினால் வரும் 7ம் தேதி அனைத்து தனியார் ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக விவசாயிகள் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வராத நிலையில், இப்பிரச்னையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும் என்று கூறி நேற்று திருப்போரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருப்போரூரில் இன்று அதிகாலை அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர்கள் ராஜலட்சுமி, கார்த்திகேயன், செயல் அலுவலர் குமரவேல் மற்றும் பல்வேறு கோயில்களில் இருந்து அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் வந்திருந்தனர்.

மாமல்லபுரம் போலீஸ் டிஎஸ்பி. அறிவழகன், இன்ஸ்பெக்டர்கள் திருப்போரூர் ராஜாங்கம், திருக்கழுக்குன்றம் ரமேஷ், காயார் மருதப்பன் ஆகியோர் அடங்கிய 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோயிலுக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட புல எண்களில் அடங்கிய 229 ஏக்கர் 92 சென்ட் நிலங்கள் மீட்கப்பட்டு, 19 இடங்களில் கோயில் பெயர் பலகையும், எச்சரிக்கை பலகையும் நடப்பட்டன. இதன்மூலம் தனிநபர்களிடம் இருந்து ரூ.700 கோடி மதிப்பிலான 230 ஏக்கர் விவசாய நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

நூற்றாண்டு கால இழுபறிக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது மீட்கப்பட்டுள்ள கோயில் விவசாய நிலங்களில் பயிரிடுவோர் தொடர்ந்து பயிர் செய்து கொள்ளலாம். அவர்களை குத்தகைதாரராக கோயில் தரப்பில் பதிவு செய்து, குறைந்தபட்ச குத்தகை தொகை வசூலிக்கப்படும். அதேபோல், கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளோர், தாங்களாகவே முன்வந்து கோயிலுக்கான குத்தகை தொகையை முறையாக செலுத்த வேண்டும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: