மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் இனி இலவச சிகிச்சை இல்லை: பிரசவம் முதல் அறுவை சிகிச்சை வரை கட்டணம், பாஜ கூட்டணி அரசு திடீர் முடிவால் மக்கள் அதிர்ச்சி

மும்பை: மகாராஷ்டிராவில் ஏழை, எளிய மக்கள் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த ஏழை மக்களுக்கு கட்டணம் இன்றியோ அல்லது குறைந்த கட்டணத்திலோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மக்களுக்கு பேரதிர்ச்சி அளிக்கும் விதமாக மகாராஷ்டிர அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, இனி அரசு மருத்துவமனைகளில் இலவச சேவைகள் வழங்கப்படாது என்றும் ஒவ்வொரு சேவைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவில் பதிவு செய்வது முதல் அறுவை சிகிச்சை வரை அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. அதன் படி இனி மாவட்ட, கிராமப்புற, துணை மாவட்ட, மகளிர் நல மருத்துவமனைகள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பல்வேறு சிகிச்சைகளுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். அதற்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணையின் படி, உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் ஒரு நாளைக்கு கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். ஹீமோகுளோபின், டிஎல்சி, ரத்தம் மற்றும் ஆர்எச் பரிசோதனை போன்ற ரத்த பரிசோதனைகள் ஒவ்வொன்றிற்கும் ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படும். சிறுநீரகங்கள் போன்றவற்றை பரிசோதிப்பதற்கான இன்ட்ராவெனஸ் பைலோகிராம் (ஐவிபி) எக்ஸ்-ரே ஸ்கேனுக்கு 100 ரூபாயும், தலையில் சிடி ஸ்கேன் செய்வதற்கு 300 ரூபாயும், முதுகுத்தண்டு, கழுத்து மற்றும் மார்புக்கான சிடி ஸ்கேனுக்கு 400 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

மயக்க மருந்துடன் செய்யப்படும் பெரிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகளுக்கு ரூ.60 முதல் ரூ.160 வரையிலும், எம்ஆர்ஐ ஸ்கேனுக்கு 1,600 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு முதல் பிரசவம் இலவசமாக பார்க்கப்படும். இரண்டாவது பிரசவத்திற்கு ரூ.50 மற்றும் மூன்றாவது மற்றும் அதற்கு மேலான பிரசவங்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படும்.

அதே போல அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் ஏசி அறைக்கு ஒரு நாளைக்கு ரூ.150, ஏசி இல்லாத அறைக்கு ஒரு நாளைக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும். தீவிர சிகிச்சைப் பிரிவு (ஐசியூ) கட்டணம் ஒரு நாளைக்கு ரூ.100 என்றும், ஒரு முறை ஹீமோடையாலிசிஸ் செய்வதற்கு ரூ.150 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்குவதற்கான கட்டணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியாருக்கு வழங்கப்படும் சடலங்களைப் பதப்படுத்துவதற்கு ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்படும்.

குறிப்பாக ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 5 ரூபாயும், 8 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தால் காத்திருப்பு கட்டணமாக ஒரு மணி நேரத்திற்கு 30 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது. அரசு விதித்துள்ள அதிகபட்ச கட்டணம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு தான். அந்த சிகிச்சைக்கு ரூ.40,000 கட்டணம் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் எம்பி, எம்எல்ஏக்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கான இலவச சிகிச்சையை நிறுத்திவிட்டு எம்பி, எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு இலவச சிகிச்சை அளிப்பதாக அரசு கூறியிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related Stories: