விருதுநகர்- திருச்சி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் அருப்புக்கோட்டை பகுதி மக்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை, பிப். 3:  அருப்புக்கோட்டை ரயில் நிலையம் மீட்டர்கேஜ் பாதையாக இருந்த நிலையில், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. அதன்பின் இந்த வழித்தடத்தில் விருதுநகர்- அருப்புக்கோட்டை வழி திருச்சி பயணிகள் ரயில் தினசரியும், வாரத்திற்கு ஒருமுறை புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒரு ரயில் சேவையும், வாரத்திற்கு 3 நாட்கள் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி இயக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். எனினும் ரயில்வே நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனால் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதி மக்கள் சென்னை செல்ல அருப்புக்கோட்டையிலிருந்து ஆம்னி பேருந்துகளிலும், மதுரைக்கு சென்று ரயில்களிலும் ஏறி செல்கின்றனர். இதனால் கூடுதல் பணச்செலவும், காலவிரயமும் ஏற்படுகிறது. மேலும் விருதுநகரில் இருந்து திருச்சி வரை சென்ற பயணிகள் டெமோ ரயில் கொரோனாவை காரணம் காட்டி கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில்தான் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி செல்லும் மக்கள், அரசு அலுவலகங்களுக்கு செல்லும்  ஊழியர்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் சென்று வந்தனர். மேலும் மானாமதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்ல இணைப்பு ரயிலாகவும் இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை இந்த ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை மேலும் புதுச்சேரி, கன்னியாகுமரி ரயிலும் இயக்கப்படவில்லை. பேருந்தை காட்டிலும் ரயிலில் பயணம் செய்யவே பொதுமக்கள் விரும்புகின்றனர். எனவே கொரோனா காலத்தி ல்நிறுத்தப்பட்ட விருதுநகர்- திருச்சி ரயில், புதுச்சேரி- கன்னியாகுமரி ரயில், வாரத்திற்கு 3 நாட்கள் சென்னைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை தினசரியும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: