சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தில், ராகுல்காந்தியை பேச விடாமல் தடுத்து கூச்சல் எழுப்பியதோடு, அவரது ஒலிபெருக்கியும் துண்டிக்கப்பட்டது. சபாநாயகர் ஓம்பிர்லா, நாடாளுமன்ற நடைமுறை மரபுகளை மீறி பாரபட்சமாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார். குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எதிர்கட்சித் தலைவர் பேசிய பிறகு, பிரதமர் உரையாற்றுவது நாடாளுமன்ற மரபாகும்.
ஆனால், ராகுல்காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு துணிவற்ற பிரதமர் மோடி, அன்று பதில் கூறாததோடு சபைக்கு வருவதையும் தவிர்த்தார். ஆனால், மறுநாள் பிரதமர் மோடி சபைக்கு வர வேண்டாம் என்றும், வந்தால் நாடாளுமன்ற காங்கிரஸ் பெண் உறுப்பினர்கள் எஸ்.ஜோதிமணி, சுதா ராமகிருஷ்ணன், வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்ட உறுப்பினர்களால் பிரதமர் தாக்கப்படுவார் என்கிற சூழல் இருந்ததால் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று நான் தான் கூறினேன் என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எதிர்கட்சித் தலைவரை பேசவிடாமல் தடுத்ததை கண்டித்து தான் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளின் மீது மிகுந்த நம்பிக்கையுள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள், குறிப்பாக பெண் உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று சபாநாயகர் ஓம்பிர்லா கூறுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யாகும்.
இதன்மூலம் சபாநாயகர் என்கிற புனிதமான பதவிக்கு ஓம்பிர்லா களங்கம் கற்பித்திருக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை இந்தியாவில் உருவாக்கி, வளர்த்து செழுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடியும், சபாநாயகர் ஓம்பிர்லாவும் கூறுவதை வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
