ஆலந்தூர்: ஆலந்தூர் வடக்கு, தெற்கு பகுதி மற்றும் கன்டோன்மென்ட் நகர திமுக செயல் வீரர்கள் கூட்டம், பரங்கிமலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட துணை செயலாளர் இ.கருணாநிதி எம்எல்ஏ, ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர்கள் பி.குணாளன், என்.சந்திரன், நகர செயலாளர் டி.பாபு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கலாநிதி குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி இளைஞரணி அமைப்பாளர் கோ.பிரவீன்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘தேர்தலில் வெற்றிபெறும் ஆசையில், அதிமுகவினர் பொய் பிரசாரம் செய்வார்கள். இதனை முறியடிக்கும் வகையில் முதல்வரின் சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்துச் சொல்ல வேண்டும். மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்று அதிமுகவினர் பிரசாரம் செய்கிறார்கள். ஒன்றிய அரசு உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்று மிரட்டியதால் அவர்கள் கையெழுத்து போட்டுவிட்டார்கள்.
கலைஞர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வராக இருந்தவரை உதய் மின் திட்டத்தில் கையெழுத்திடவில்லை. ஜெயலலிதா இறந்த பின் ஆட்சிக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை மிரட்டியதால் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணியிடம் உதய் மின்திட்டத்தில் கையெழுத்து வாங்கிவிட்டார்கள். இன்று மின்சார கட்டண உயர்வுக்கு முழு காரணம் அதிமுக தான், என்று பொதுமக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். நமது தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகள் நடந்துள்ளது. கட்சியினர் பொறுப்புடன் பணியாற்றி தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும்,’’ என்றார்.
