பொன்னை அருகே விவசாய நிலத்தில் நெல், கரும்பு பயிர்களை சேதப்படுத்திய 2 யானைகள் விரட்டியடிப்பு

 

பொன்னை: வேலூர் மாவட்டம் பொன்னை அருகே வனப்பகுதியொட்டி உள்ள பரமசாத்து கிராமத்தில் நேற்றிரவு 2 யானைகள் புகுந்தது. பின்னர் அந்த யானைகள் விவசாய நிலத்திற்குள் சென்று பயிர்களை சேதப்படுத்தியது. சுமார் 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள், கரும்பு ஆகியவற்றை சேதப்படுத்தியது. யானைகள் விவசாய நிலத்தில் புகுந்ததை அறிந்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனவர் அருணா தலைமையில் 5 வனக்காவலர்கள் வந்து யானைகளை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும் யானைகளை விரட்டினர். இன்று அதிகாலை யானைகள் அங்கிருந்து வெளியேறி ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பூங்குன்றம் மலைப்பகுதிக்கு சென்றது. அங்கு தற்போது யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் யானைகளால் விவசாய பயிர்கள் சேதமாகி வருவதாகவும், அதேபோல் தற்போது சேதமான நெற்பயிர்கள், கரும்பு பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: