மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள், கட்டுமானங்களை உருவாக்க நகரமைப்பு திட்ட அதிகாரி ஒப்புதல் அரசாணையை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தை 1990ம் ஆண்டு தமிழக அரசு அமைத்தது. இந்த அமைப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள 597 கிராமங்களில் இந்த ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ள முடியாது. இந்நிலையில், மலைப்பகுதிகளில் வீட்டு மனைகள் அமைப்பதற்கு மலைப்பகுதி பாதுகாப்பு ஆணைய ஒப்புதல் பெறுவதற்கு பதிலாக நகரமைப்பு திட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியும், நிலங்களை வகை மாற்றம் செய்ய அனுமதி வழங்கியும் கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணை, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தமிழக அரசின் அரசாணை காரணமாக மலைப்பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அரசாணையின் அடிப்படையில், மலைப்பகுதிகளில் வீட்டு மனைகளுக்கும், கட்டுமானங்களுக்கும் நகரமைப்பு திட்ட அதிகாரிகள் ஒப்புதல் வழங்க தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: