தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க விருதுநகர் கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

 

சென்னை: தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க விருதுநகர் கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம் என்று இளைஞர் அணியினருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். விருதுநகர் கலைஞர் திடலில் நாளை திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடக்கிறது. இதில் 28 திமுக மாவட்டங்களுக்கு உட்பட்ட 91 சட்டப்பேரவை தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் முதல் பாகம் வரை, வாக்குச்சாவடி அளவிலான இளைஞர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் என ஒரு லட்சத்து 50 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் வெண்சீருடை அணிந்து, “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், அகிலமே வியக்கும் வண்ணம் மாபெரும் எழுச்சியோடு பங்கேற்கின்றனர்.

திமுக இளைஞர் அணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிலையில் திமுக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிற்காகவும் தமிழர் உரிமைக்காகவும் தியாகிகளையும் தீரர்களையும் வாரி வழங்கிய விருதுநகர் மண்ணில் நாளைய தினம் நடைபெற இருக்கிறது திமுக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு. திமுக தலைவர்- தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காத்துப் புதிய வரலாறு படைக்க, தென் மண்டல தீரர் படையே திரண்டு வாரீர்! கல்குறிச்சி கலைஞர் திடலில் சந்திப்போம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: