சேலத்தில் நடிகர் விஜய் கூட்டம்; விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யாத தவெக: திருப்பி அனுப்பிய போலீசார்

 

சேலம்: தவெக தலைவர் நடிகர் விஜய் கரூரில் செய்த பிரசாரத்தின்போது பெண்கள், குழந்தைகள் என 41 பேர் கூட்டநெரிசலில் சிக்கி பலியாகினர். இதையடுத்து பிரசார பயணத்தை நடிகர் விஜய் ரத்து செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அவர் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் மகுடஞ்சாவடியிலும், சேலம் மாநகரில் சீலநாயக்கன்பட்டியிலும் வருகிற 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் நடத்த அனுமதி கேட்டு த.வெ.க.வினர் மனு கொடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அனுமதி கேட்ட இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றால் முறையாக விண்ணப்பமனு கொடுக்க வேண்டும். கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள், அவர்களுக்கு சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளதா? வாகனங்கள் நிறுத்த இடம் இருக்கிறதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு தெளிவாக பதில் தெரிவிக்க வேண்டும். பொதுக்கூட்டம் நடத்த நீதிமன்றம் விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது தொடர்பான உறுதி கொடுக்க வேண்டும்.

ஆனால் தற்போது எந்தவிதமான தகவலையும் தெரிவிக்காமல் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கேட்டு மனு கொடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் மனுவை போலீசார் திரும்ப வழங்கினர். முழுமையாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு தெரிவித்தனர்.

Related Stories: