திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பான 2 வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து உண்ணிகிருஷ்ணன் போத்தி 3 மாதங்களுக்குப் பின்னர் சிறையில் இருந்து நேற்று வெளியே வந்தார். சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு வழக்குகளிலும் உண்ணிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்குகளில் 90 நாட்கள் ஆகியும் சிறப்பு புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் முன்னாள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகளான முராரி பாபு, சுதீஷ்குமார் மற்றும் ஸ்ரீகுமார் ஆகிய 3 ஜாமீன் கிடைத்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான உண்ணிகிருஷ்ணன் போத்தியும் ஜாமீன் கோரி கொல்லம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் ஒரு வழக்கில் கடந்த மாத 21ம் தேதி இவருக்கு ஜாமீன் கிடைத்தது. அடுத்த வழக்கிலும் ஜாமீன் கோரி இவர் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், வாரத்தில் 2 நாட்கள் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும், கேரளாவை விட்டு வெளியே செல்லக்கூடாது, பத்தனம்திட்டா மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது உள்பட நிபந்தனைகளுடன் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து 3 மாதங்களுக்குப் பின் உண்ணிகிருஷ்ணன் போத்தி நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். இதற்கிடையே இவரிடம் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.
