கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வளைகுடா நாடுகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம்

புதுடெல்லி:இந்தியா, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான விதிமுறைகளில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள 6 நாடுகளின் கூட்டமைப்பான வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில்(ஜிசிசி)சவுதி அரேபியா, யுஏஇ, கத்தார், குவைத், ஓமன் மற்றும் பஹ்ரைன் உள்ளன. இந்தியா ஏற்கனவே2022ல் யுஏஇ உடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்தியுள்ளது.

டிசம்பர், 2025 ல் மஸ்கட்டில் இந்தியாவும் ஓமனும் ஒரு விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜிசிசி உடனான சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படுகிறது. ஏனெனில் முந்தைய இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் 2006 மற்றும் 2008 ம் ஆண்டுகளில் இரு பிராந்தியங்களுக்கிடையில் நடைபெற்றன. ஜிசிசி அனைத்து நாடுகள் மற்றும் பொருளாதாரக் குழுக்களுடனான பேச்சுவார்த்தைகளை ஒத்திவைத்ததால் மூன்றாவது சுற்று நடக்கவில்லை.

இந்தியா முக்கியமாக சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்கிறது. மேலும் இந்த நாடுகளுக்கு முத்துக்கள், விலைமதிப்பற்ற கற்கள், உலோகங்கள், செயற்கை ஆபரணங்கள், மின் இயந்திரங்கள், இரும்பு மற்றும் எஃகு மற்றும் ரசாயனங்களை ஏற்றுமதி செய்கிறது.

இந்த நிலையில், ஜிசிசி நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான விதிமுறைகளில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இந்த ஒப்பந்தம் மூலம் இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு அதிகரிக்கும் என்றார்.

* வளைகுடா நாடுகளில் இந்தியாவின் ஏற்றுமதி 2024-25 ம் ஆண்டில் சுமார் ரூ. 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

* சுமார் 1 கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வேலை செய்கின்றனர்.

* வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவின் இறக்குமதி ரூ.11 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

Related Stories: