டெல்லி, குஜராத்தில் பாரத் டாக்சி சேவை தொடக்கம்

புதுடெல்லி: கூட்டுறவு முறையிலான சவாரி தளமான பாரத் டாக்சி சேவையை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். இந்தியாவில் ஓலா மற்றும் உபர் போன்ற தனியார் நிறுவனங்களுக்குப் போட்டியாக, ஒன்றிய அரசின் கூட்டுறவு அமைச்சகத்தின் ஆதரவுடன் பாரத் டாக்ஸி என்ற புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது ஒன்றிய கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டாக்சி சேவையாகும்.

கூட்டுறவு முறையில் இயங்கும் இந்தத் தளம், ஓலா மற்றும் ஊபர் போன்ற முன்னணி டாக்சி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமையும். பயணிகளுக்குக் குறைந்த கட்டணத்திலும், ஓட்டுநர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் வகையிலும் இது இருக்கும். பாரத் டாக்சி ஜீரோ கமிஷன் என்ற அடிப்படையில் இயங்கும். வேறு நிறுவனங்கள் நெரிசல் நேரங்கள் அல்லது மோசமான வானிலை காலங்களில் கட்டணத்தை உயர்த்துவது வழக்கம். ஆனால், பாரத் டாக்சியில் கட்டணங்கள் நிலையானதாக இருக்கும்.

டெல்லியில் நேற்று நடந்த விழாவில் ஒன்றிய கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா பாரத் டாக்சியை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், ‘பாரத் டாக்சி முதலில் டெல்லி என்சிஆர் பகுதிகள் மற்றும் குஜராத்தில் தொடங்கப்படும். இன்னும் 3 ஆண்டுகளில் இந்த சேவை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்’ என்றார். டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 800-1,000 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

* பாரத் டாக்ஸி தளம் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூ.100 இல் ரூ.20 ஐ வைத்திருக்கும்.
* ரூ.80 ஓட்டுநர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்லும். மீதம் உள்ள ரூ.20ன் உரிமை ஓட்டுநர்களிடமே இருக்கும்.
* 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் இந்த தளத்தில் இணைந்துள்ளனர்.
* டெல்லி-என்சிஆர் மற்றும் குஜராத்தில் தினமும் 10,000க்கும் மேற்பட்ட சவாரிகள் முடிக்கப்பட்டுள்ளன.

Related Stories: