முதியோர் தேசமாக மாறும் இந்தியா: கேரளா முதலிடம், 2வது இடத்தில் தமிழ்நாடு; ஆர்பிஐ அறிக்கையில் தகவல்

நாட்டில் முதியோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு மக்கள் தொகையில் 15.8 சதவிகிதம் பேர் 60 வயதை கடந்த முதியோர் பட்டியலில் சேர்ந்து இந்தியா அளவில் 2ம் இடம் பிடித்து சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மக்கள் தொகை மற்றும் மாநிலங்கள் நிதி அடிப்படியாக கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. முதியோர்களின் எண்ணிக்கையை பொறுத்து 3 பிரிவுகளாக மாநிலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையின்படி 15 சதவீதத்துக்கு அதிகமான முதியோர் உள்ள மாநிலங்களை முதுமை அடைந்த மாநிலங்கள் எனவும், 10 முதல் 15 சதவீதம் வரை முதியோர் உள்ள மாநிலங்கள் இடைநிலை மாநிலங்கள் என்றும், 10 சதவீதத்தை விட குறைந்த அளவில் முதியோர் உள்ள மாநிலங்களை இளைஞர் மாநிலங்கள் என்று வகைப்படுத்தி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் 2026ம் ஆண்டு தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 15.8 சதவீதம் முதியோர்கள் உள்ள நிலையில், இது 2031ம் ஆண்டு 20.9 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் 2016ம் ஆண்டு அனைத்து மாநிலங்களும் இளைஞர்கள் மற்றும் இடைநிலை மாநிலங்கள் பட்டியலில் இருந்த நிலையில் நடப்பாண்டு ஆய்வு அறிக்கையின் படி, நாடு முழுவதும் 60 வயதை கடந்த முதியோர் எண்ணிக்கை 11.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2036ம் ஆண்டுக்குள் 14.9 சதவீதமாக உயரும் என கூறப்படுகிறது.

முதுமை மாநிலங்களில் தமிழ்நாடு 2ம் இடம்
அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின் படி, கேரளாவில் அதிகபட்சமாக 18.7 சதவீத முதியோருடன் முதுமை மாநிலங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதனால் 2031ம் ஆண்டு முதியோர் தொகை அம்மாநிலத்தில் 22.8 சதவீதமாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் 60 வயதை கடந்தவர்கள் 15.8 சதவீதத்துடன் 2ம் இடத்தில் உள்ளது. இது 2031ம் ஆண்டு 20.8 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதார தாக்கம் ஏற்பட்டு ஓய்வூதியம், சுகாதாரம், சமூக பாதுகாப்புக்கு மாநில அரசுகளின் செலவினங்கள் கணிசமாக அதிகரிக்கும். மேலும் உழைக்கும் மக்கள் தொகை குறைவதால், வருவாய் வளர்ச்சி குறைந்து மாநிலத்தின் வரி வருவாய் திறன் பாதிக்கப்பட்டு நிதிச்சுமை அதிகரித்து பெரும் சவால் சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என கூறப்படுகிறது.

முதியோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
மக்கள் தொகை உருமாற்றத்தால், அரசுகளுக்கு ஏற்படும் நிதிச்சுமையை சமாளிக்கவும், நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யவும், பொருளாதார தாக்கத்தை ஈடு செய்யும் வகையில் முதியோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தொழிலாளர் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வந்து, தொழில்நுட்பங்கள் கொண்டு வந்து உற்பத்தி திறனை அதிகரிப்பது மாநில அரசுகளுக்கு தேவையாக உள்ளது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டால் பிறப்பு விகிதம் குறைவு
நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பால் உணவு பற்றாக்குறை, வேலை வாய்ப்பு பிரச்னை, சுகாதார சீர்கேடு போன்ற பாதிப்புகளை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் தொகை கட்டுப்பாடு முன்னெடுப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடைந்தது. கடந்த காலங்களில் மக்கள் அதிக அளவில் குழந்தைகளை பெற்று கூட்டு குடும்பங்களாக இருந்து வந்தனர். அரசின் பல்வேறு முடிவுகளால் குழந்தைகள் பெற்றுக் கொள்வது படிப்படியாக குறைந்து இன்று ஒரு குடும்பம் ஒரு குழந்தை என்ற நிலை உள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாட்டால் குழந்தைகள் பிறப்பு குறைந்து விட்டது. அதற்கு மாறாக முதியோர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் உழைப்பவர்கள் குறைந்து வருகின்றனர்.

குழந்தைகள் பெற்றுக் கொள்வது ஊக்கப்படுத்தப்படுமா?
நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைளால் முதியோர் உயர்வு அதிகரித்துள்ள நிலையில், குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் ஒன்றிய, மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகள், திட்டங்கள் அனைத்தும் மாற்றம் கொண்டு வரப்பட்டு, குழந்தைகளை பெற்றுக் கொள்வதை அரசுகள் ஊக்கபடுத்தினால் மட்டுமே இளைஞர் இந்தியாவை உருவாக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: