செங்கம்: செங்கம் வனப்பகுதி அருகே உள்ள பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட ஆடுகள் சிறுத்தை கடித்துக்குதறியதில் இறந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கோலாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி. இவர் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை பகலில் அருகே உள்ள வயல்வெளிகளில், வனப்பகுதியில் மேய்த்துவிட்டு இரவில் வனப்பகுதி அருகே தனது விளைநிலத்தில் உள்ள பட்டியில் குமாரி அடைத்து வைப்பாராம். இதேபோல் நேற்று மாலையும் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு குமாரி வீட்டிற்கு வந்துவிட்டார்.
இன்று காலை பட்டிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது பட்டியில் இருந்த 25க்கும் மேற்பட்ட ஆடுகள், குட்டிகளும் ரத்தகாயத்துடன் இறந்து கிடந்தது. இவற்றை சிறுத்தை கடித்துக்குதறியது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமாரி கதறி அழுதார். இதையறிந்த அப்பகுதி மக்களும் அங்கு வந்து பார்த்து குமாரிக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து வனத்துறைக்கு குமாரி தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சிறுத்தை வந்து சென்றதற்கான அடையாளம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இறந்த ஆடுகளுக்கு நஷ்ட ஈடு கிடைக்க ஏற்பாடு செய்வதாக வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் கூறினர். பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகளை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
