×

ஸ்ரீவில்லி-மேகமலை புலிகள் காப்பகத்தில் 2வது நாளாக பற்றி எரியும் காட்டுத் தீ: தீயை அணைக்க வனத்துறை போராட்டம்

 

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் பகுதியில் 2வது நாளாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், மேகமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அரிய வகை மூலிகைச் செடிகளும் உள்ளன.

இந்நிலையில், வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூங்கன் கடவு பகுதியில், நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி எரிந்து வருகிறது. தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் இரண்டு குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு ஆனதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து, 2வது நாளாக தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீயால் பல அரிய வகை மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகின. வனவிலங்குகள் வேறு பகுதிக்கு ஓட்டம் பிடித்துள்ளன.

Tags : Srivilliputhur ,Megamalai Tiger Reserve ,Vathirairiruppu ,Megamalai… ,
× RELATED நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள் ஒப்படைப்பு