கராச்சி: பாகிஸ்தானின் தென்மேற்கே இயற்கை வளங்கள் நிறைந்த மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். பாகிஸ்தான் தனி நாடாக பிரிக்கப்பட்டபோது, பலுசிஸ்தான் மாகாணம் பலூச் மன்னரின்கீழ் தனி நாடாக இருந்து வந்தது. பின்னர் வளங்கள் நிறைந்த பலுசிஸ்தானை பாகிஸ்தான் தன்னோடு இணைத்து கொண்டது. இதையடுத்து, பாகிஸ்தான் அரசிடம் இருந்து விடுதலை கேட்டும், பலுசிஸ்தானை பிரித்து தனி நாடாக அறிவிக்க வலியுறுத்தி பலுச் விடுதலை ராணுவம், தெஹ்ரிக்-இ-தாலிபன் பாகிஸ்தான் உள்ளிட்ட போராளிக்குழுக்கள் போராடி வருகின்றன.
இந்த போராளிக்குழுக்கள் அவ்வப்போது காவல்நிலையங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன. இதற்கு பாகிஸ்தான் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த இரு தினங்களாக பாகிஸ்தான் ராணுவத்துக்கும், பலுச் விடுதலை ராணுவத்தை சேர்ந்த போராளி குழுக்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல்களில் நேற்று 22 பலுச் விடுதலை ராணுவத்தை சேர்ந்த போராளிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால் பலியான பலுச் போராளிகளின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளது.
