கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் நிப்ரோ நகரில் நேற்று ரஷ்ய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் சுரங்க தொழிலாளர்களை ஏற்றி சென்ற பஸ் மீது குண்டு பாய்ந்தது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். அந்த பஸ் தங்களுக்கு சொந்தமானது என உக்ரைனின் மிக பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ‘டி.டி.ஈ.கே’ உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் கூறுகையில், ‘தங்களது சுரங்க தொழிலாளர்கள் பணி முடிந்து திரும்பியபோது இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது’ என குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அடுத்த வாரம் மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
