×

வர்த்தக பிரச்னை பிரதமர் மோடியுடன் பேசினார் டிரம்ப்

நியூயார்க்: இந்தியாவிற்கு எதிரான டிரம்பின் வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் பிரதமர் மோடியுடன், அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் ஆகியவற்றைக் காரணம் காட்டி, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதுகுறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அதற்கான ஒப்பந்தம் இறுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த தகவலை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார். மேலும் மக்கள் தொடர்ந்து காத்திருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி அவர் தனது எக்ஸ் பதிவில்,’ அமெரிக்க அதிபர் டிரம்ப் சற்று முன்பு பிரதமர் மோடியுடன் பேசினார். காத்திருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே டெல்லியில் உள்ள இந்தியா கேட் படத்தை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமெரிக்க அதிபர்,’இந்தியாவின் அழகான வெற்றி வளைவு. எங்களுடையது அனைத்திலும் மிகச் சிறந்ததாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

அவர்,‘இன்று இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசியது பெருமையாக இருந்தது. அவர் எனது சிறந்த நண்பர்களில் ஒருவர், அவரது நாட்டின் சக்திவாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர். வர்த்தகம், ரஷ்யா மற்றும் உக்ரைனுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவிலிருந்தும், வெனிசுலாவிலிருந்தும் இன்னும் பலவற்றை வாங்கவும் அவர் ஒப்புக்கொண்டார். இது உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும். பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதை காரணமாக, அவரது வேண்டுகோளின்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம், இதன் மூலம் அமெரிக்கா குறைக்கப்பட்ட பரஸ்பர கட்டணத்தை வசூலிக்கும், அதை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கும். அமெரிக்காவிற்கு எதிரான தங்கள் கட்டணங்கள் மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாகக் குறைக்க அவர்கள் முன்னேறுவார்கள். இந்தியாவுடனான எங்கள் அற்புதமான உறவு எதிர்காலத்தில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் விஷயங்களைச் செய்து முடிக்கும் இரண்டு பேர், இது பெரும்பாலானவர்களுக்குச் சொல்ல முடியாத ஒன்று,’ என தெரிவித்தார்.

Tags : Trump ,Modi ,New York ,President Trump ,India ,US ,
× RELATED பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மெகா ஆபரேஷன்: 145 பலூச் போராளிகள் சுட்டுக்கொலை