×

சிந்து நதி நீர் விவகாரம் இந்தியா முடிவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் உத்தரவு: பிப்.9க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

ஹேக்: சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியா முடிவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்த உத்தரவுக்கு எதிராக பாகிஸ்தான், சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச நடுவர் நீதிமன்றம், சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியாவின் முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் அங்கு செயல்பட்டு வரும் கிஷன் கங்கா மற்றும் ரட்லே ஆகிய இரண்டு நீர்மின் நிலையங்களின் செயல்பாட்டுப் பதிவேடுகளை பிப்ரவரி 9ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு இந்தியாவுக்கு உத்தரவிட்டது. சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவில்லை என்றால் அதற்கான முறையான விளக்கத்தை அளிக்குமாறும் இந்தியாவுக்கு அறிவுறுத்தி உள்ளது.

சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சட்டவிரோதமானது, பாகிஸ்தானுக்குச் சாதகமானது என்று இந்தியா கடுமையாகச் சாடியது. இதுபற்றி மேலும் கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய வெளியுறவு அமைச்சகம்,’ சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை இந்தியா ஒருபோதும் முறையாக அங்கீகரிக்கவில்லை. எனவே சிந்து நதி நீர் ஒப்பந்த பிரச்னையை அந்த நீதிமன்றத்தின் கீழ் விசாரித்தது கடுமையான மீறல். அந்த நீதிமன்றம் எடுக்கும் எந்தவொரு தீர்ப்பும் அல்லது முடிவும் சட்டவிரோதமானது. எனவே ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷன் கங்கா மற்றும் ரட்லே நீர்மின் திட்டங்கள் குறித்த சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவு நிராகரிக்கப்படுகிறது. சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அந்த ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தனது எந்தவொரு கடமைகளையும் நிறைவேற்ற இந்தியா இனி கட்டுப்படவில்லை.

மேலும் ஒரு இறையாண்மை கொண்ட நாடாக இந்தியா தனது உரிமைகளைப் பயன்படுத்தி எடுக்கும் நடவடிக்கைகளின் சட்டப்பூர்வத்தன்மையை ஆராய யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் அரங்கேற்றப்படும் இந்த சமீபத்திய நாடகம், பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக அதன் பங்கிற்குப் பொறுப்பேற்பதிலிருந்து தப்பிப்பதற்கான அதன் மற்றொரு அவநம்பிக்கையான முயற்சியாகும். இந்த போலியான நடுவர் மன்ற வழிமுறையை பாகிஸ்தான் நாடியிருப்பது, பல தசாப்தங்களாக சர்வதேச மன்றங்களை ஏமாற்றி, கையாண்டு வரும் அதன் வழக்கமான பாணியுடன் ஒத்துப்போகிறது’ என்று தெரிவித்துள்ளது.

* பாக். பிரதமர் சொல்வது என்ன?
பாகிஸ்தானின் நீர்ப் பாதுகாப்பு பொறுப்பான மற்றும் சட்டப்பூர்வமான எல்லை தாண்டிய ஒத்துழைப்பைப் பொறுத்தது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைப் பாதிக்கும் இந்தியாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தொடர்ந்து கவலை கொண்டுள்ளது. நீரியல் தரவுகளைப் பகிர்ந்துகொள்வது உட்பட, ஒப்பந்த வழிமுறைகளை நிறுத்தி வைப்பது, நம்பிக்கையையும் கணிக்கக்கூடிய தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. காலநிலை அழுத்தங்கள் அதிக ஒத்துழைப்பைக் கோரும் நேரத்தில் இது நிகழ்கிறது. நீர் ஒருபோதும் கட்டாயப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தப்படக்கூடாது, மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான போர்க் கருவியாக நீரை ஆயுதமாக்குவது நிராகரிக்கப்பட வேண்டும். ஏனெனில், சிந்து நதிப் படுகையை நம்பியுள்ள ஒரு நாட்டில் நதி நீரோட்டங்களில் ஏற்படும் இடையூறு லட்சக்கணக்கான உயிர்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் உணவு அமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது’ என்றார்.

Tags : International Court ,India ,River ,International Court of Justice ,Sindh River ,Kashmir Pahalkam attack ,Pakistan ,
× RELATED பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மெகா ஆபரேஷன்: 145 பலூச் போராளிகள் சுட்டுக்கொலை