கெய்ரோ: காசா போரின் தொடர்ச்சியாக கடந்த 2024ம் ஆண்டு மே மாதம் காசா எகிப்து இடையேயான ரஃபா எல்லையை இஸ்ரேல் கைப்பற்றி, அந்த வழியாக பாலஸ்தீனர்கள் எகிப்து நாட்டுக்கு செல்வதை தடுத்து நிறுத்தியது. காசாவின் ஒரு நுழைவாயிலாக இருந்த ரஃபா எல்லை மூடப்பட்டதால் பாலஸ்தீனர்கள் மிகவும் அவதியுற்று வந்தனர். நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர டிரம்ப் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்தார். இதனை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்று கொண்டதையடுத்து, ரஃபா எல்லை விரைவில் திறக்கப்படும் என அண்மையில் அறிவிப்பு வௌியானது.
இந்த சூழலில் நேற்று முன்தினம்(ஜன.31) அதிகாலை காசாவில் உள்ள ரஃபா பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் பலியாகினர். இதனால் மீண்டும் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு, ரஃபா எல்லை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. காசாவில் உள்ள பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தும், பலர் நோயுற்றும் உள்ள நிலையில், தொடக்கத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பாலஸ்தீனர்கள் மட்டுமே ரஃபா எல்லை வழியாக எகிப்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. உதவி பொருள்களை ஏற்றி வந்த லாரிகள் காசாவுக்குள் நுழைந்தன.
