தாராபுரம்: தாராபுரம் அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 250 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் ஜேசிபி டிரைவரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கியம் காவல் நிலையம் தளவாய்பட்டினம் கிராமம் அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள கால்வாய் சந்திப்பு பகுதியில் சொலம்பாளையம் அருகே அலங்கியம் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே போலீசார் அவரை சோதனை செய்தனர்.
அதில் அவர் தலா 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 குடிநீர் பாட்டில்களில் கள்ளச்சாராயம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் சொலம்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் சுந்தரம் (28) என்பதும், ஜேசிபி டிரைவரான இவர் சொலம்பாளையம் அருகே கால்வாயில் 250 லிட்டர் அளவிலான பேரலில் விற்பனைக்கு கொண்டு செல்ல கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் சுந்தரத்தை கைது செய்தனர்.
