மனிதனின் ஆன்மா எங்கு செல்லும்?

?மனிதனின் ஆன்மா எங்கு செல்லும்?
– பி.கனகராஜ், மதுரை.

இந்தக் கேள்வி எல்லோருடைய உள்ளத்திலும் எழுவது இயற்கையே. இதற்கான பதிலை சற்று விளக்கமாகவே காண்போம். சித்தாந்தத்தின் படி ஆன்மா என்பது ஒன்று அல்ல. அது மூன்று வகைப்படுகிறது. நம் அனைவருக்குள்ளும் ஜீவாத்மா, பரமாத்மா, அந்தராத்மா என்ற மூன்றும் செயல்படுகிறது. ஜீவாத்மா என்பது உயிர்சக்தியைக் குறிக்கும். கிரியாசக்தி என்றும் சொல்லலாம். கிரியை என்றால் செயல்பாடு என்று பொருள். நமது உடல் இயங்குவதற்கான சக்தியைக் கொடுப்பது இந்த ஜீவாத்மா. பரமாத்மா என்பது நமக்குள் இருக்கும் இறைசக்தியைக் குறிக்கும். இதனை ஞானசக்தி என்றும் சொல்லலாம். அன்பு, கருணை, இரக்கம் என அத்தனை நற்குணங்களையும் தருவது இந்த பரமாத்மா எனும் ஞானசக்தி. அந்தராத்மா என்பது நமக்குள் இருக்கும் ஆசையைக் குறிக்கும். இதனை இச்சாசக்தி என்றும் சொல்லலாம். இச்சை என்றால் ஆசை, அல்லது விருப்பம் என்று பொருள். பொன் வேண்டும், பொருள் வேண்டும் என இந்த மனம் அலைகிறதல்லவா.. அதாவது இந்த உலகில் நாம் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்பு களைத் தேடத் தூண்டுவது இந்த அந்தராத்மா. இந்த மூன்றும் சரியான விகிதாச்சாரத்தில் சராசரி மனிதனின் உடம்பினில் இடம்பிடித்திருக்கின்றன.

வெறும் பொம்மை ஆகிய இந்த உடம்பிற்குள் ஜீவாத்மா என்கிற உயிர்சக்தி உடலை இயங்கச் செய்கிறது. காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா என்கிறார் திருமூலர். இந்த பையிற்குள் காற்று எனும் ஜீவாத்மாவை அடைத்தால் பிண்டம் உயிர்பெறுகிறது. மற்ற இரண்டு ஆத்மாக்களும் இந்த உடம்பினில் இணையவில்லை எனில் உயிர் இருந்தாலும் இது வெறும் ஜடம் ஆகவே கருதப்படும். ஒரு சில குழந்தைகள் எந்த வித அசைவுமின்றி அப்படியே கிடப்பதைக் காண்கிறோம். இந்த குழந்தைகளுக்கு உயிர் இருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பது எதுவுமே தெரியாது. இவர்களது உடம்பினில் வெறும் ஜீவாத்மா மட்டுமே இயங்கும். பிறந்த குழந்தை வளரத்தொடங்கும்போது பசியென்று அழுகிறது. ஒரு பொம்மையைப் பார்த்து விளையாடுவதற்கு வேண்டும் என்று விரும்புகிறது.

இவ்வாறாக கொஞ்சம், கொஞ்சமாக அதன் மனம் இந்த உலக வாழ்க்கையை விரும்பத் தொடங்குகிறது. இதுவே அந்தராத்மா என்னும் இச்சாசக்தியின் செயல்பாடு. இச்சாசக்தியின் வேகம் அதிகரிக்கும்போது இந்த மனம் பேராசைப்படுகிறது. தவறு செய்யத் தூண்டுகிறது. இவை அனைத்தும் வெறும் மாயை, உலகினில் வாழ இது மட்டும் போதாது, ஆண்டவனின் அருளும் தேவை, அதற்கு பிற உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தல் வேண்டும் என்ற ஞானத்தை நமக்குள் தோற்றுவிப்பது பரமாத்மா எனும் ஞானசக்தி. அந்தராத்மாவின் சக்தியை வெகுவாகக் குறைத்து பரமாத்மாவின் சக்தி அதிகரிக்கப் பெற்றவர்களை ஞானிகள் என்று போற்றுகிறோம்.

அதனால் இவர்களை கடவுளுக்குச் சமமாக ஆலயங்கள் எழுப்பி வழிபாடு செய்கிறோம். இயேசுநாதர், சாயிபாபா, ராகவேந்திரர் ஆகியோரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இப்பொழுது உங்கள் கேள்விக்கான பதிலைக் காண்போம். உடலை விட்டு உயிர் பிரியும்போது நமது உடம்பிற்குள் இருந்த ஜீவாத்மா எனும் கிரியாசக்தி வேறு ஒரு பிண்டத்தினைச் சென்றடைகிறது. அந்த உடம்பு உயிர்பெற்று உலகினில் பிறவி எடுக்கிறது. நமக்குள் இடம்பெற்றிருந்த பரமாத்மா எனும் ஞானசக்தி இறைவனின் பாதத்தைச் சென்றடைகிறது. இதனைத்தான் பரமபதம் அடைந்தார், அல்லது இறைவனடி சேர்ந்தார் என்று குறிப்பிடுகிறார்கள். அந்தராத்மா என்று அழைக்கப்படும் இந்த இச்சாசக்தியே ஆவியாக அலைகிறது. இந்த ஆத்மாவிற்கு நாம் இறந்துவிட்டோம் என்பது அவ்வளவு எளிதாகப்புரிவதில்லை.

அந்த ஆத்மாவை அமைதி கொள்ளச் செய்து, அதனை பித்ருலோகத்திற்குச் சென்றடையச் செய்வதற்குத்தான் நாம் கரும காரியங்களைச் செய்கிறோம். அவரவருக்கு உரிய மத சம்பிரதாய சடங்குகளைச் செய்து பித்ருலோகத்திற்குச் சென்றடையச் செய்வதற்கான கடமை பிள்ளைகளுக்கு உரித்ததாகிறது. இந்த அந்தராத்மாவிற்குத்தான் பிரதி வருடம் திவசம் கொடுக்கிறோம், அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்கிறோம். ஆக நீங்கள் கேட்ட ஆத்மா என்பது மூன்று வகைப்படுகிறது. அதில் ஒன்று வேறு ஒரு இடத்தில் மீண்டும் பிறக்கிறது. ஒன்று இறைவனின் பாதத்தைச் சரணடைகிறது. மூன்றாவது பித்ருலோகத்தைச் சென்றடைகிறது என்பதே உங்கள் கேள்விக்கான தெளிவான பதில்.

?பரம்பரை நோய் இருக்கிறது என்று கூறுகிறார்களே, உண்மையா?
– வண்ணை கணேசன், சென்னை.

உண்மைதானே. சர்க்கரை வியாதி போன்றவை பரம்பரையாக வருவதை மருத்துவர்களும் ஒப்புக் கொள்கிறார்களே. ஜோதிடவியல் ரீதியாக மரபணுக்களை கடத்தும் கிரஹங்களாக ராகு – கேதுக்களைச் சொல்வார்கள். இந்த ராகு மற்றும் கேதுவின் சஞ்சார நிலையே பரம்பரை வியாதிகளைத் தருகிறது என்பதை ஜோதிடமும் வலியுறுத்துகிறது. ஆக, பரம்பரை வியாதி என்பது உண்மையே. அதே நேரத்தில், எல்லா வியாதிகளும் பரம்பரை வியாதிகள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

?பொதுவாக கோபுர கலசத்திற்குள் என்னென்ன பொருட்கள் வைக்கப்படுகிறது?- என். இளங்கோவன், மயிலாடுதுறை.

பொதுவாக கோபுர கலத்திற்குள் வரகு தானியத்தை நிரப்பி வைத்திருப்பார்கள். ஒரு சிலர், விதை நெல்மணிகளை நிரப்பி வைக்கிறார்கள். இதுபோன்ற தானியங் களைத் தவிர வேறு எந்த பொருளையும் கோபுர கலசத்திற்குள் வைப்பதில்லை.

?60 வயதிற்கு மேல் உள்ளவர்களை சனி திசை பாதிக்காதா?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.

முதலில் சனி திசை என்றாலே பாதிப்பினைத் தரும் என்ற கருத்தே தவறானது. சனி திசை காலத்தில் அளப்பறிய நற்பலன்களை அடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். எந்த வயதினராக இருந்தாலும், ஜாதகத்தில் நடக்கும் தசாபுக்திகளின் அடிப்படையில்தான் பலன் என்பது நடக்கிறது. இதற்கு வயது வரம்பு ஏதும் கிடையாது.

?இறைவனை உணர எளிய வழி?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

அன்பே சிவம், தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை, குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும் என நம்மவர்கள் பல எளிய வழிகளை சொல்லித் தந்திருக்கிறார்களே, இவற்றைப் பின்பற்றினாலே இறைவனை எளிதாக உணர இயலுமே. இந்த வழிகளை சரிவரப் பின்பற்றி வந்தாலே உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம் என்பதையும் உணர்ந்துவிடுவோம்.

Related Stories: