சனிபெயர்ச்சி பரிகாரத் தலங்கள்

பகுதி 2

இடும்பாவனம்

முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். சனி பகவான் மக்களை சோதித்ததால் ஏற்பட்ட பிரச்னைகளை சுமந்த மக்கள் துன்பமடைந்தனர். இதனால் அதாவது தன்னால் ஏற்பட்ட சோதனைகளின் துன்பம் தீரவும், மக்களின் மனதினில் ஏற்பட்ட தன்னைப்பற்றிய தவறான அபிப்ராயத்தை போக்கிக் கொள்ளவும் இத்தலத்து ஈசனான சற்குணநாதரை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷப் பரிகாரத் தலமாக வழங்கப் படுகிறது.

வழுவூர்

இத்தலம் மயிலாடுதுறைக்கு அருகே உள்ளது. ஈசனின் திருப்பெயர் வீரட்டேஸ்வரர் ஆகும். சோழ மன்னன் ஒருவர் இந்தப் பகுதியை அரசாண்டபோது சனி பகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது சனி பகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனிபகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாரம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார்.

பவானி – கொடுமுடி

ஈரோட்டிலிருந்து 39 கி.மீ தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இந்த இரண்டு தலங்களில் சனி பரிகாரம் செய்து கொள்ளலாம்; சனிபகவான் அருள் கிட்டும்.

குருமந்தூர்

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம், குருமந்தூரில் உள்ளது சனீஸ்வரர் ஆலயம். நாகை மாவட்டம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானுக்குச் செய்வது போலவே எல்லா வழிபாடுகளும் இங்கும் செய்யப்படுகின்றன. இவரும் அனைத்து சனி தோஷங்களையும் தணித்து நல்வாழ்வு மலர அருள்கிறார்.

சனிபகவான் வணங்கிய திருவாதவூர் திருமறைநாதர்

மதுரை மாவட்டத்தில் உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் சனிபகவான், திருமறைநாதரை வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். திருவாதவூர் திருமறைநாதரை வழிபட்டால், திருமறைநாதர் அருளால் சனியின் வீரியம் குறையும் என நம்பப்படுகிறது. சூரிய பகவானின் மைந்தனான சனிபகவானுக்கு மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் பாதம் முடமானது. சனிபகவான் தனது தந்தையான சூரிய பகவானிடம் முறையிட்டார். இருவரும் சேர்ந்து மாண்டவ்ய முனிவரிடம் சாப விமோசனம் கேட்டனர். அப்போது, மாண்டவ்ய முனிவர் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையம்பதிக்குத் தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது திருவாதவூர்த்தலம். அங்குள்ள திருமறைநாதரை நியமப்படி வணங்கினால் உன் சாபம் சரியாகும் என்றார். அதன்படி, சூரியனும், சனியும் திருவாதவூர் தலத்திற்கு வந்து, நியமப்படி நீராடி, சிவனை வணங்கினர். திருவாதவூரில் வழிபட்டவரை வருத்தாதே என்று கேட்டுக் கொண்டார். பின்பு, சனீஸ்வர பகவானின் வாதம் நிவர்த்தியாகி, சிவன் எதிரிலேயே அமர்ந்த திருக்கோலத்தில் தனி சந்நதியில் காட்சியளிக்கிறார். சனி பகவான் இங்கு தனி சந்நதியில் அருள்கிறார். இத்தலத்து ஈசனை வழிபட சனிபாதிப்பிலிருந்து தப்பலாம். இத்தலம் மதுரைக்கு வடகிழக்கே 20 கி.மீ தொலைவில் உள்ளது.

Related Stories: