வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச விழா: 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வடலூர்: வடலூர் சத்தியஞானசபையில் 155வது ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு இன்று காலை 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைப்பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.  வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய தருமச்சாலை, சத்திய ஞானசபையை 1867 ம் ஆண்டு நிறுவினார். இந்த ஆண்டு 155வது தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தைப்பூச தினமான இன்று காலை 6 மணிக்கு ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. மனிதன் இறைவனை காண மனதில் இருக்கும் எண்ணங்களை அகற்ற வேண்டும் என்பதை விளக்கும் வகையில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்மை, வெண்மை மற்றும் கலப்பு திரை என 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

அப்போது அங்கு திரண்டிருந்த சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன், ‘‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி” என்ற மகா மந்திரத்தை முழங்கினர். இதில் தமிழகம் மட்டும் அல்லாமல் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணி, 10 மணி மற்றும் நாளை (திங்கட்கிழமை) காலை 5.30 மணிக்கு என மொத்தம் ஆறு காலங்கள் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நகராட்சி சார்பில் கழிவறை வசதி, குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். விழுப்புரம் டிஐஜி அருளரசன் மேற்பார்வையில் கடலூர் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், வடலூர் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் 1700 க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

159 வது ஆண்டாக எரியும் அணையா அடுப்பு: ஜாதி, மதம், மொழி, இனம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் மக்களின் பசியை போக்குவதற்காக 1867ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி சத்தியத்தரும சாலையை நிறுவி வள்ளலார் கையால் அணையா அடுப்பு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அதாவது சுனாமி, புயல், வெள்ளம் என எந்தப் பேரிடர் வந்தபோதும் தடையின்றி மக்களுக்கு இங்கு உணவு வழங்கபட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் சமைக்கப்பட்டு மூன்று வேளையும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இவ்வாறு பெருமை வாய்ந்த அணையா அடுப்பு 158 வது ஆண்டை நிறைவு செய்து 159 வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல உணவகங்கள் மூடப்பட்ட நிலையிலும் விதிமுறைகளை பின்பற்றி தினந்தோறும் ஆயிரம் கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: