வாலாஜா: வாலாஜா-பாலாறு அணைக்கட்டு ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்டதால் 4 மாட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கும், விவசாயிகளுக்கும் வரப்பிரசாதமாக உள்ளதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள திருமலைச்சேரி, புதுப்பாடி கிராமங்களின் அருகே பாலாறு அணைக்கட்டு உள்ளது.
இந்த அணைக்கட்டை புனரமைக்க தமிழக அரசு ரூ.200.66 கோடி ஒதுக்கீடு செய்தது. அதன்படி பாலாறு அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிந்து தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சுமார் 168 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வாலாஜா பாலாறு அணைக்கட்டில் கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் புனரமைப்பு பணிகள் தொடங்கி நிறைவு பெற்றது.
பாலாறு ஆற்றின் குறுக்கே 244 கி.மீட்டரில் திருமலைச்சேரி மற்றும் ஆற்காடு வட்டம் புதுப்பாடி ஆகிய கிராமங்களுக்கிடையே உள்ள இந்த அணைக்கட்டானது 801 மீட்டர் நீளமும், 3.10 மீட்டர் உயரமும் கொண்டதாகும். ஆண்டிற்கு 150 மி.கன அடி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையிலும், அதிகப்படியாக வினாடிக்கு 1.75,000 கன அடி வெள்ளநீர் வெளியேறும் வகையிலும், இரு புறங்களிலும் 39 மணற்போக்கிகள் மற்றும் 84.26 கி.மீ., நீளம் கொண்ட 4 பிரதான கால்வாய்கள் வழியாக ஒரே நேரத்தில் வினாடிக்கு 6,124 கன அடி தண்ணீர் திருப்பும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணைக்கட்டில் இருந்து செல்லும் 4 பிரதான கால்வாய்களின் மூலம் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த வேகவதி, செய்யாறு, கீழ்பாலாறு. கொசஸ்தலை ஆறு, கூவம் ஆறு, அடையாறு ஆகிய உபவடிநிலங்களில் உள்ள 319 ஏரிகளுக்கு நீர் வருவது வழக்கம். அதன்மூலம் சுமார் 77,510.65 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக பாசன வசதி பெறும். மேற்கண்ட ஏரிகளின் மொத்த கொள்ளளவு 10 டி.எம்.சி ஆகும். இந்த அணைக்கட்டு புனரமைத்ததின் மூலம் 4 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் ெபருக்கும். இதனால் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
