அசோக் நகரில் நடந்த வாகன சோதனையில் சினிமா படப்பிடிப்புக்கு கொண்டு சென்ற 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல்

 

சென்னை: அசோக் நகரில் நடந்த வாகன சோதனையின் போது சினிமா படப்பிப்புக்கு கொண்டு சென்ற 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கிகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிறகு உரிய ஆவணங்கள் காட்டியதால் விடுவிக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி வாரியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மாவட்ட எல்லைக்குட்பட்ட அசோக் நகர் செகண்ட் அவென்யூ பர்ஸ்ட் ஸ்ட்ரீட் ஜங்ஷனில் தி.நகர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த வேனை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் 10 ஏ.கே.47 துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. இதை பார்த்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் உண்மையான துப்பாக்கிகள் என்று நினைத்து அதிர்ச்சியடைந்தனர்.

பிறகு வேனில் கொண்டு வந்த நபரிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகி வரும் டிசி திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக 10 ஏ.கே.47 டம்மி துப்பாக்கிகள் கொண்டு சென்று, படப்பிடிப்பு முடிந்ததும் வடபழனிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. பின்னர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் டம்மி துப்பாக்கிக்கான லைசன்ஸ் கேட்டனர்.

அப்போது வேனில் வந்த நபர், உடனே கொண்டு வருவதாக கூறி சிறிது நேரத்தில், டம்மி துப்பாக்கிக்கான லைசன்ஸ் ஆவணங்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் கொண்டு வந்து காட்டினார். அதைதொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 10 டம்மி ஏ.கே.47 துப்பாக்கிகளை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அசோக் நகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: