ஊட்டி தாவரவியல் பூங்காவில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணி தீவிரம்

 

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனுக்காக அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக முதல் மற்றும் 2வது சீசனின்போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முதல் சீசன் அனுசரிக்கப்படும் நிலையில், அப்போது பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதனால், அப்போது வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், மலர் கண்காட்சி தாவரவியல் பூங்காவில் நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர். கடந்த ஆண்டு நடந்த மலர்கள் கட்சியை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

இந்நிலையில், அடுத்த மாதம் கோடை சீசன் துவங்க உள்ள நிலையில், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதில், குறிப்பாக தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி நடத்து வருகிறது. 35 ஆயிரம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர பூங்காவில் அலங்கார செடிகள் தயார் செய்யப்பட்டது. இந்த அலங்கார செடிகள் பூங்காவில் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர் பாத்திகள், நடைபாதை ஓரங்கள் மற்றும் சரிவுகளில் நடவு செய்யப்படுகிறது. மேலும் மலர் செடிகள் இல்லாத இடங்களிலும் இந்த அலங்கார செடிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்களை மேற்கொள்ள பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: