சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜ, அன்புமணி பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து உள்ளனர். பாஜவை பொறுத்தவரை 50 தொகுதிகள் வரையும், அமைச்சரவையில் பங்கும் கேட்டு வருகிறது. இதனால், தொகுதி பங்கீடு விவகாரத்தில் இரண்டு கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜ தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளின் பட்டியலை அதிமுகவிடம் அளித்துள்ளது. அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையையும் பாஜ தொடங்கியுள்ளது.
அந்த வகையில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, விருகம்பாக்கம், வேளச்சேரி, மயிலாப்பூர் ஆகிய 3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றை தர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், வேளச்சேரி தொகுதியில் போட்டியிடும் ரேஸில் தமிழக பாஜ இளைஞர் அணி தலைவர் சூர்யாவும் இருந்து வருகிறார். அதே நேரத்தில் அந்த தொகுதிக்கு உட்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக்கும் இந்த தொகுதியை குறி வைத்துள்ளார். இதனால், இந்த தொகுதி தமிழிசைக்கு கிடைக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல தமிழிசை போட்டியிட நினைத்த மற்றொரு தொகுதியான விருகம்பாக்கத்தில் கடந்த முறை போட்டியிட்ட அதிமுகவே இந்த முறையும் போட்டியிட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட விருகை என்.ரவி மீண்டும் களமிறக்கப்பட உள்ளார். இதனால், இந்த தொகுதியிலும் தமிழிசைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த தொகுதியில் தான் தமிழிசையின் வீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தமிழிசை கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வேளச்சேரியிலும், 2016 சட்டசபை தேர்லில் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், இந்த முறை மயிலாப்பூர் தொகுதி பக்கம் கண்ணை திருப்பி உள்ளார். இந்த தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜ தரப்பில் போட்டியிட தமிழிசையை தவிர வேறு யாரும் விரும்பவில்லை. இதனால், இந்த முறை தமிழிசை மயிலாப்பூரில் களமிறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வெற்றிபெறவில்லை. அதனால் 2026ம் ஆண்டு தேர்தலில் எப்படியும் சென்னையில் சில தொகுதிகளை கைப்பற்ற எடப்பாடி முடிவு செய்து வருகிறார்.
இதனால், முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள், பணத்தை அதிகளவில் செலவு செய்யும் வேட்பாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி, அதிமுக முன்னாள் பெண் அமைச்சரும் மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதியை ஆயிரம் விளக்கு அல்லது அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். காரணம், ஆயிரம் விளக்கு தொகுதியில் இதற்கு முன் வளர்மதி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதனால் வளர்மதியை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், அதிமுகவில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்யும்போது வளர்மதி, வேளச்சேரி அல்லது மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கட்சி தலைமை ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் தொகுதிக்கு போட்டியிட தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு வளர்மதி, மறுப்பு தெரிவித்து விட்டாராம். இதனால் கட்சி தலைமையும் வளர்மதி மீது அதிருப்தியுடன் உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, 1984ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
அதன்பின்னர் 2001ம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2006ம் ஆண்டு ஆலந்தூரில் போட்டியிட்ட வளர்மதி தோல்வியடைந்தார். பின்னர் தொகுதி மாறி ஆயிரம் விளக்கு தொகுதியில் 2011ம் ஆண்டு போட்டியிட்டு வென்றார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்தார். 2016ம் ஆண்டு அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட வளர்மதி தோல்வியடைந்தார். 2021ம் ஆண்டு ஆலந்தூர் தொகுதியில் திமுகவின் தா.மோ.அன்பரசனை எதிர்த்து வளர்மதி போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தொடர் தோல்வி பயம் காரணமாக இந்த முறை வளர்மதி வேளச்சேரி அல்லது மயிலாப்பூரில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், மயிலாப்பூர் தொகுதி அதிமுகவின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வேளச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் அதிமுக வேட்பாளராக நின்று தோல்வி அடைந்த எம்.கே.அசோக், மீண்டும் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். அதனால் வளர்மதிக்கும் – எம்.கே.அசோக் ஆகியோர் இடையே வேளச்சேரியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
* பணம்லா ஒரு மேட்டரே இல்ல….
ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இந்த முறை வேட்பாளர்கள் தேர்விலும் அந்தந்த கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் தேர்தல் அறிக்கையையும் மக்களை கவரும் வகையில் தயார் செய்யப்படும் என தெரிகிறது. திமுகவின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு அதிமுகவும் இதுபோன்ற திட்டத்தை தேர்தல் அறிக்கையில் கொண்டு வர முனைப்பு காட்டுகிறதாம். பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அப்போது பெண்களுக்கு மாதம் ரூ.2500, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துமாறும் நிதியை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளாராம். எனவே, அதிமுகவுக்கு நிதி குறித்து கவலை இல்லை என்பதால் தேர்தல் அறிக்கையை எப்படி வேண்டுமானாலும் தயாரித்துக் கொள்ளலாம் என்ற கனவில் உள்ளது.
