பெற்றோருக்கு பணம் தருவது கடனா?, கடமையா? ‘கடமையை உணராதவரெல்லாம் ஒரு தலைவனா’: சோஷியல் மீடியாக்களில் ரோஸ்ட் ஆகும் விஜய்

சேலம்: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணி, என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியநிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அங்கு வரும் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் எனக்கூறப்படுகிறது.பெரம்பூர் தொகுதியில் நடிகர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்ததில், தனது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளார். அதில், ரூ.624 கோடி அசையும், அசையா சொத்து இருப்பதாக கூறியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் ரூ.734 கோடி வருமானம் ஈட்டியதாக கூறியுள்ள நடிகர் விஜய், தனது அப்பா, அம்மா, மனைவி, மகன், மகளுக்கு கடன் கொடுத்துள்ளதாகவும் பட்டியிலிட்டுள்ளார்.

அதில், அப்பா சந்திரசேகருக்கு ரூ.3.02 கோடியும், அம்மா ஷோபாவிற்கு ரூ.87.12 லட்சமும், மனைவி சங்கீதாவிற்கு ரூ.12.60 கோடியும், மகன் ஜேசன் சஞ்சய்க்கு ரூ.8.78 லட்சமும், மகள் திவ்யா சாஷாவிற்கு ரூ.4.6 லட்சமும் கடன் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். பெற்றெடுத்த தாய், தந்தைக்கு மகன் பணம் கொடுப்பதையும், கட்டிய மனைவி, வாரிசுகளாக பிள்ளைகளுக்கு பணம் கொடுத்ததை நடிகர் விஜய் கடனாக கணக்கு காட்டியிருப்பதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

அப்பா, அம்மாவுக்கு பணம் கொடுப்பது கடனா?, கடமையா? என சமூகவலைதளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு, நடிகர் விஜய்யை விளாசியுள்ளனர். ஒவ்வொரு மகனின் கடமையாக கொள்ள வேண்டியது, வளர்ந்த பின் பெற்றெடுத்த தாய், தந்தையை கண் கலங்காமல் பார்த்துக் கொள்வது தான். இதற்காக அவர்களின் செலவினத்திற்கு பணம், பொருள் வழங்குவது மகனின் கடமையாகும். ஏழை, நடுத்தர குடும்பங்களில் இன்றைக்கும் வேலைக்கு செல்லும் மகன், மகள் தங்களது அப்பா, அம்மாவுக்கு மாதந்தோறும் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்கின்றனர். தனிக்குடித்தனம் சென்றிருந்தாலும், அப்பா, அம்மாவை கைவிடாமல் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து, காப்பாற்றி வருகின்றனர்.

சொத்துக்களை பறித்துக் கொண்டு, பெற்ற தாய், தந்தையை தெருவில் விடும் நபர்கள் மீது மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவர்களிடம் இருந்து பறித்த சொத்துக்களை மீட்டு திரும்ப ஒப்படைக்கவும் சட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் பெற்ற அப்பா, அம்மாவிற்கும், கட்டிய மனைவி, பிள்ளைகளுக்கு கொடுத்த பணத்தை கடனாக நடிகர் விஜய் கணக்கு காட்டியிருப்பது அவரது ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நம்ம தலைவன் வேற மாதிரியாக இருக்கிறார்?, மனைவி, பிள்ளைகளை வொர்த் இல்லை என்கிறார், தற்போது அவர்களுக்கு கோடி கணக்கில் கடன் கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறார், இந்த தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்னென்னவெல்லாம் சொல்ல போகிறாரோ? என கிண்டலடித்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் கடன் பட்டியல் தான் தற்போது, வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் தளத்தில் வைரலாகியுள்ளது. அதற்கு மக்களிடம் இருந்து வரும் கமெண்ட்களில், இவரை போல் யாரும் இருக்கக்கூடாது, அப்பா, அம்மாவுக்கு கொடுத்த பணம் கடனா என சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர். கடமையை செய்ய தவறும் நபர் எப்படி நமக்கெல்லாம் தலைவராவார் எனவும் காட்டமாக விமர்சித்துள்ளனர். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பேசுப்பொருளாகியுள்ளது.

Related Stories: